கரூர் உயிரிழப்பு சம்பவம் - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் Video Callல் பேசிய விஜய்
கரூர் உயிரிழப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய், வீடியோ காலில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறப்பு புலனாய்வு குழு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இதில், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமறைவாக உள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மருத்துவமனையில்சந்தித்து ஆறுதல் கூறினர்.
தவெக தலைவர் விஜய், சம்பவம் நடந்த இரவே தனி விமானம் மூலம் சென்னை சென்று, தற்போது வரை பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காதது கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது.
வீடியோ காலில் பேசிய விஜய்
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும் தவெக சார்பில் வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த 3 நாட்களுக்கு பிறகு, வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், பாதிக்கப்பட்டவர்களை விரைவில் நேரில் சந்திப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ காலில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் பேசிய அவர், இழப்பை என்னால் ஈடு செய்ய முடியாது, என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என விஜய் ஆறுதல் கூறியதாகவும், மேலும் விரைவில் நேரில் சந்திப்பேன் என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |