ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியில்லை.., அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக போட்டியில்லை
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முடிவடையவுள்ளது.
இந்த தேர்தலில் திமுகவும், நாம் தமிழர் கட்சியும் போட்டியிடும் நிலையில் எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணித்துள்ளது. அதேபோல, பாஜகவும் தேர்தலை புறக்கணித்துள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியில்லை என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் திகதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு என்றும், அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
மேலும் தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றாமல் தங்களின் அதிகார பலத்துடன் பொதுத் தேர்தல்களைக் காட்டிலும், ஜனநாயகத்திற்கு எதிராகப் பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
அதனடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 5 ம் திகதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதையும் கழகத் தலைவர் உத்தரவின்பேரில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |