ஆட்சியைப் பிடிப்போம்... கரம் கோர்த்த 100 முன்னாள் இராணுவ அதிகாரிகள் : பிரான்சில் பரபரப்பு
பிரான்சில் இராணுவ ஆட்சிக்கு அழைப்பு விடுத்து முன்னாள் இராணுவ அதிகாரிகள் 100 பேர் கரம் கோர்த்துள்ளதால், அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில் பிரான்சில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரசியல் சாசனத்துக்கு எதிரான வகையில், நாட்டின் பெரும்பகுதியை பிரித்து தங்கள் பகுதியாக மாற்றிக்கொள்ளும் எல்லை வாழ் இஸ்லாமியவாதிகளால் பிரான்ஸ் சிதைந்துகொண்டிருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், நாட்டில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் என்றும், ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரிடும் என்றும் அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளனர் அவர்கள்.
Jean-Pierre Fabre-Bernadac என்ற முன்னாள் இராணுவ அதிகாரி எழுதியுள்ள அந்த கடிதத்தில் 20 ஜெனரல்கள், 80 ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் சாதாரண நிலையிலிருக்கும் 1,000 இராணுவத்தினர் கையெழுத்திட்டுள்ளனர்.
தங்களுக்கு இராணுவத்தில் பெரும் ஆதரவு இருப்பதாகவும், நாட்டின் பாதுகாப்பின்மீது கவனம் செலுத்தும் அரசியல்வாதிகளுக்கு ஆதரவளிக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தலில் இமானுவல் மேக்ரானை ஏற்கனவே எதிர்த்து போட்டியிட்டவரும், 2022 தேர்தலில் மீண்டும் போட்டியிட இருப்பவருமான Marine Le Pen, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளதால் ஆளுங்கட்சியினர் கொதித்துப்போயிருக்கிறார்கள்.
அந்த கடிதத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இராணுவ அமைச்சரான Florence Parly, இராணுவம் என்பது பிரச்சாரம் செய்வதற்காக அல்ல, அது பிரான்சையும் பிரான்ஸ் மக்களையும் பாதுகாப்பதற்காகவும், எதிரிகளை எதிர்த்து போரிடுவதற்காகவுமே என்று கூறியுள்ளார்.
பொறுப்பற்ற வகையில் அந்த கடிதத்தை எழுதியுள்ள அனைவருமே நம் இராணுவத்தில் எந்த பொறுப்பிலும் இல்லாத ஓய்வு பெற்ற இராணுவத்தினர் என்றும், நடுநிலைமையும் உண்மையும்தான் இராணுவத்தின் கொள்கைகள், அவை இராணுவத்தினரின் நடத்தைக்கு முக்கியமானவை என்றும் ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு மதிப்பிற்குரிய Le Pen ஆதரவளித்துள்ளது, கவலையை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ள Parly, இராணுவத்தை வைத்து அரசியல் செய்வது, இராணுவத்தின் திறனையும் பிரான்சையும் வலுவிழக்கச் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.