10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரிகள்
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 28 ஆம் திகதி முதல், ஏப்ரல் 15 ஆம் திகதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது.
மொத்தம் 9,13,036 பேர் எழுதிய இந்த தேர்வுக்கான முடிவு, இன்று காலை 9 மணிக்கு வெளியானது. மொத்தம் 93.80 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள்
இரட்டையர்கள் என்ற தோற்றத்தில், பார்ப்பதற்கு ஒரே போல் இருப்பார்கள். ஆனால் இரட்டையர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில், சுந்தரராஜன் பாரதி செல்வி தம்பதியரின் இரட்டை குழந்தைகளான கவிதா, கனிஹா இந்த தேர்வில் 474 மதிப்பெண் எடுத்துள்ளனர். அதுவும் கணிதத்தில் இருவரும் 94 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த இரட்டை சகோதரிகளான கனிஹா மற்றும் கவிதா, “நாங்கள் இருவரும் ஓரளவுக்கு நன்றாக படித்தோம். ஆனால், ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுப்போம் என்று கனவிலும் நினைக்கவில்லை.
11, 12 ஆம் வகுப்பில் நாங்கள் இருவரும் பயோ மேக்ஸ் பிரிவு எடுக்க திட்டமிட்டுள்ளோம். 12 ஆம் வகுப்பிலும் இதே போல் நல்ல மதிப்பெண்கள் எடுப்போம். ஆசிரியர்களுக்கும், கடவுள்களுக்கும், எங்களின் பெற்றோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளனர்.
இதே போல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த ஹரிதா மற்றும் ஹரிணி என்ற இரட்டையர்கள், தலா 573 மதிப்பெண்கள் பெற்றனர். அதே போல், கோவையை சேர்ந்த அகல்யா மற்றும் அக்ஷயா என்ற இரட்டையர்கள் தலா 555 மதிப்பெண்கள் பெற்று அசத்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |