Facebook, WhatsApp-ஐ தொடர்ந்து இன்று Twitter முடக்கம்! அதிர்ச்சியில் பயனர்கள்
சமீபத்தில் பேஸ்புக், வாட்ஸஅப் போன்ற சமூக வலைத்தளங்கள் முடங்கியதுபோல் இன்று சில பயனர்களுக்கு ட்விட்டர் முடங்கியுள்ளது.
கடந்த வாரம் திடீரென Facebook, WhatsApp, Instagram, போன்ற சமூக வலைத்தளங்கள் திடீரென முடங்கின. ஆரம்பத்தில் ஏதோ நெட்ஒர்க் கோளாறு என்றே பயனர்கள் நினைத்திருந்தனர், ஆனால் பல மணி நேரங்கள் இந்த வலைத்தளங்கள் முடங்கி கிடந்தன.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட பல மணி நேர முடக்கத்துக்கு பின்னர் இந்த வலைத்தளங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
பின்னர், ஃபேஸ்புக் நிறுவனமும் இந்த முடக்கத்துக்காக பயனர்களிடம் மன்னிப்பு கோரியது.
திடீரென இந்த தளங்கள் முடங்கியதால் தகவல் பரிமாற்றத்துக்கு வழியில்லாமல் ஸ்தம்பித்து போயினர். உலக அளவில் பல பில்லியன் டொலர் மதிப்பில் இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
வேறு வழியின்றி லட்சக்கணக்கான பயனர்கள் Signal, Telegram போன்ற தளங்களுக்கு மாறினர். ஆயினும் அந்த நேரத்தில் பலருக்கும் கைகொடுத்தது ட்விட்டர் மட்டும் தான். அதற்காக ட்விட்டரை தூக்கிவைத்து கொண்டாடினர்.
Picture: AFP via Getty Images
இதுபோன்ற முக்கிய சமூக வலைத்தளங்கள் முடங்கியது பயனர்களுக்கு சிரமத்தை தந்த நிலையில் இன்று (புதன்கிழமை) அடுத்த அதிர்ச்சியாக ட்விட்டர் சேவையும் முடங்கியிருக்கிறது.
இன்று அதிகாலை 5 மணியளவில் இந்தியாவிலும் பலருக்கும் ட்விட்டர் சேவை முடங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
Downdetector எனும் இணைய பயன்பாட்டை கண்காணிக்கும் அமைப்பு வெளியிட்டிருக்கும் தகவலின்படி, இன்று காலை 8 மணியளவில் சுமார் 459 பேருக்கு ட்விட்டர் முடங்கியதாகவும், இது தொடர்பாக புகார் எழுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.