டுவிட்டரின் புதிய வடிவமைப்பு குறித்து பயனர்கள் அதிருப்தி
உலகின் முதனிலை சமூக ஊடகங்களில் ஒன்றான டுவிட்டரில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வடிவமைப்பு குறித்து பயனர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
டுவிட்டர் நிறுவனம் கடந்த வாரம் புதிய வடிவமைப்பினை அறிமுகம் செய்திருந்தது. எனினும், இந்த வடிவமைப்பானது பயனர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதாகவும், பயனர்களுக்கு தலை வலியை ஏற்படுத்துவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வடிவமைப்பில் மாறுபட்ட நிறம், புதிய எழுத்தமைப்பு (Font) உள்ளிட்ட சிலவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
எனினும், அதிக வெளிர் நிறங்கள் பயன்படுத்தப்பட்டதனால் வாசிப்பதில் பயனர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். டுவிட்களை வாசிப்பதற்கு தமது கண்களை அதிகளவு கஸ்டப்படுத்த நேரிட்டுள்ளதாக பயனர் ஒருவர் முறையிட்டுள்ளார்.
பார்வை தொடர்பான சிரமங்களை உடையவர்களினால் புதிய வடிவமைப்பினை பயன்படுத்த முடியாது என மற்றுமொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறைப்பாடுகளை ஏற்றுக் கொண்ட டுவிட்டர் நிறுவனம் விரைவில் மாற்றங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
எழுத்துக்களை வாசிப்பதில் காணப்படும் சிரமங்கள் குறித்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் குறித்து கவனம் செலுத்தி வருவதாக விரைவில் இந்த தொழில்நுட்ப பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் டுவிட்டர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.