பிரித்தானியாவில் 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் அரிய நோய் கண்டுபிடிப்பு! 2 பேர் பாதிப்பு
பிரித்தானியாவில் வேல்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் இரண்டு பேர் 'குரங்கு அம்மை' எனும் அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேல்ஸின் பொது சுகாதாரத் துறையான PHW வெளியிட்டுள்ள அறிக்கையில், அரிய நோயான குரங்கு அம்மையால் (Monkey Pox) பாதிக்கப்பட்ட இருவரும் ஒரே விட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் வெளிநாட்டிற்கு சென்றபோது இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
PHW மற்றும் பப்ளிக் ஹெல்த் இங்கிலாந்து ஆகிய இரண்டும், பாதிக்கப்பட்ட இருவரையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. அவர்கள் இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்.
குரங்கு அம்மை என்பது MonkeyPox வைரஸால் ஏற்படும் ஒரு அரிய நோயாகும், இது முக்கியமாக மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் பதிவாகியுள்ளது.
குரங்கு அம்மை பிரித்தானியாவில் முதன்முதலில் செப்டம்பர் 2018-ல் 3 பேரை பாதித்தது கண்டறியப்பட்டது. பின்னர் டிசம்பர் 2019-ல் நான்காவதாக ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது ஒரு லேசான நிலையாகக் கருதப்படுகிறது, இது ஆரோக்கியத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தாது மற்றும் சிகிச்சையின் தேவை இல்லாமல் மீட்க சில வாரங்கள் ஆகும்.
காய்ச்சல், தலைவலி, தசை வலி, வீங்கிய நிணநீர், குளிர், சோர்வு மற்றும் முதுகுவலி உள்ளிட்டவை இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள் என்றும், பின்னர் உடலில் கொப்பளம் மற்றும் அரிப்பு ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பெரியம்மை நோயைப் போன்றது மற்றும் ஆபத்தானது, ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது மிகவும் லேசானதாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்த நோய் பெரும்பாலும் மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவின் கிராமப்புறங்களில் பதிவாகின்றன என்றும் இந்த நொய் 2017-ஆம் ஆண்டும் நைஜீரியாவில் மிகவும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
2003-ஆம் ஆண்டு அமெரிக்காவிலும் இந்த நோய் இருந்ததாக கூறப்படுகிறது.