சுவிட்சர்லாந்தில் உடல் கருகி பலியான சிறார்கள் இருவர்: நள்ளிரவில் நடந்த துயரம்
சுவிட்சர்லாந்தில் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த குடியிருப்பில் சிக்கி, சிறார்கள் இருவர் பலியான சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது.
பெர்ன் மாநிலத்தின் Leuzigen பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு குடியிருப்பு ஒன்று தீவிபத்தில் சிக்கிய நிலையில், அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் அவசர உதவிக்குழுவினர் கரும்புகை சூழ்ந்து தீப்பற்றியெரியும் குடியிருப்பை கண்டுள்ளனர். தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில், குழந்தை ஒன்றுடன் பெரியவர்கள் இருவர் தீ விபத்தில் இருந்து தப்பியது தெரிய வந்தது.
இன்னொரு சிறுவரும் அந்த குடியிருப்பில் இருந்து தாமாகவே வெளியேறியுள்ளார். இந்த நால்வரும் லேசான காயங்களுடன் தப்பியதை அடுத்து அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள், குடியிருப்பின் உள்ளே இருந்து சிறார்கள் இருவரை இறந்த நிலையில் மீட்டுள்ளனர்.
விரைவான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டும், சிறார்கள் இருவரையும் உயிருடன் மீட்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்களை கடுமையாக பாதித்துள்ளது என்றே தெரிய வந்துள்ளது.
மரணமடைந்த இருவர் தொடர்பில் பெர்ன் மாநில பொலிசார் மேலதிக தகவல்கள் ஏதும் பகிரவில்லை என்றே கூறப்படுகிறது. சுமார் 80 தீயணைப்பு மற்றும் அவசர உதவிக்குழுவினரின் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதிகாலை 2.30 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தில் சிக்கிய குடியிருப்பானது மிக மோசமாக சேதமடைந்துள்ளதாகவும், தற்போதைய நிலையில் வசிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்ன் மாநில பொலிசார் குறித்த விபத்து தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.