நம் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு முறிந்துபோய்விட்டது: பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்
நீர்மூழ்கிக்கப்பல் தயாரிப்பு ஒப்பந்தத்தை திடீரென அவுஸ்திரேலியா முறித்துக்கொண்டதைத் தொடர்ந்து பிரான்சுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் இரு நாட்டுத் தலைவர்களும் தொலைபேசி வாயிலாக பேசிக்கொண்ட நிலையில், அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனிடம், நீர்மூழ்கி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அவுஸ்திரேலியா எடுத்த முடிவு, நம் இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையின் உறவை முறித்துவிட்டது என்று கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.
அந்த உறவின் அடிப்படையை மீண்டும் தொடரும் வகையிலான திடமான நடவடிக்கைகளை எடுப்பது இப்போது அவுஸ்திரேலியாவின் கையில்தான் உள்ளது என மேக்ரான் கூறியதாக ஜனதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்னவென்றால், அவுஸ்திரேலியா, 2016ஆம் ஆண்டு, நீர்மூழ்கிக்கப்பல்கள் தயாரிப்பதற்காக 50 பில்லியன் டொலர்கள் மதிப்புடைய ஒப்பந்தம் ஒன்றை பிரான்சுடன் செய்திருந்தது. இந்நிலையில், சென்ற மாதம் அந்த ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்த அவுஸ்திரேலியா, உடனடியாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடனான நீர்மூழ்கிக்கப்பல் தயாரிக்கும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. இப்படி திடீரென முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் ஒப்பந்தத்தை ரத்து செய்ததால் பிரான்ஸ் தரப்பு கடும் கோபம் அடைந்தது.
உடனடியாக அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுக்கான பிரான்ஸ் தூதர்கள் திருப்பி அழைத்துக்கொள்ளப்பட்டார்கள். அவுஸ்திரேலியா முதுகில் குத்திவிட்டதாக கொந்தளித்தார் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான Jean-Yves Le Drian.
மேலும், ஒப்பந்தம் கைவிடப்பட்டதால் அவுஸ்திரேலியா இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் பிரான்ஸ் வற்புறுத்தி வருகிறது.
இந்நிலையில்தான், அந்த உரசலுக்குப் பிறகு தற்போது மீண்டும் இரு நாட்டுத் தலைவர்களும் தொலைபேசி வாயிலாக பேசிக்கொண்டிருக்கிரார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.