இரண்டு மரணங்கள்... நாடுகளுக்கிடையே மோதல்கள்: ஒரு பொய்யால் உலகத்தைக் குழப்பிய பெண்ணின் கதை
பிரான்சில், ஒரு பதின்ம வயது பெண், தன் தந்தையிடம் சென்று தனது வரலாற்று ஆசிரியர் முகமது நபியின் நிர்வாண கார்ட்டூன்களை காட்டியதாக புகார் கூறினார்.
பாரீஸ் பள்ளி ஒன்றில், வரலாறு பாடவேளையின்போது Samuel Paty என்ற ஆசிரியர், தான் முகமது நபியின் நிர்வாணப் படங்களை காட்ட இருப்பதாகவும், இஸ்லாமிய மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறலாம் என்றும் கூறியதாக அந்த 13 வயது மாணவி தன் தந்தையிடம் சென்று கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, பத்து நாட்களுக்குப் பின் Samuel Paty தலை துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்டார். அவரைக் கொன்ற Abdullakh Anzorov என்ற தீவிரவாதியும் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டான்.
பிரான்ஸ் கலங்கியது, நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இஸ்லாமிய நாடுகள் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தின. உலகம் முழுவதும் இந்த ஒரு சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வகுப்பறையில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என அதிரவைக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
நடந்தது என்னவென்றால், அந்த மாணவி வகுப்புக்கு அவ்வப்போது மட்டம் போட்டதால், ஆசிரியர் அவளை சஸ்பெண்ட் செய்துள்ளார்.
அது அவளது தந்தைக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு பொய் சொல்லி கவனத்தை வேறு பக்கம் திருப்ப முயன்றுள்ளாள் அந்த மாணவி.
அதற்காக, தனது வரலாற்று ஆசிரியர் தான் முகமது நபியின் நிர்வாணப் படங்களை காட்ட இருப்பதாகவும், இஸ்லாமிய மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறலாம் என்றும் கூறியதாக தன் தந்தையிடம் சென்று பொய் சொல்லியிருக்கிறாள் அந்த பெண். ஆனால், அவளது ஒரு பொய் பிரான்சில் மட்டுமல்ல முழு உலகத்திலும் குழப்பங்களை உருவாக்கிவிட்டது.
நேற்று முன்தினம், அந்த மாணவி, தான் ஆசிரியர் Samuel Paty மீது பொய்யாக குற்றம் சாட்டியதாக ஒப்புக்கொண்டுள்ளதாக Le Parisien என்ற பத்திரிகை, செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
தான் பொய் சொன்னதாகவும், முகமது நபி குறித்த கார்ட்டூன்களை ஆசிரியர் காட்டும்போது தான் வகுப்பறையிலேயே இல்லை என்றும், அவள் நீதிபதி முன் தெரிவித்ததாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
வகுப்பில் ‘dilemmas’ என்ற தலைப்பில் பாடம் எடுத்த ஆசிரியர் Samuel Paty, சார்லி ஹெப்டோ என்ற பத்திரிகை, முகமது நபி குறித்த கார்ட்டூன்களை வெளியிட்டதால் தீவிரவாத தாக்குதல்களுக்குள்ளாகி 12 பேர் கொல்லப்பட்ட நிலையில், அந்த பத்திரிகையை ஆதரிப்பதா வேண்டாமா என்ற தலைப்பை தன் பாடத்துக்கு துணையாக எடுத்துக்கொண்டுள்ளார்.
அந்த நேரத்தில், அந்த கார்ட்டூன்கள் இஸ்லாமிய மாணவர்களை அதிர்ச்சியடையச் செய்யலாம் என்பதற்காக, அவர்களை கண்களை மூடவோ அல்லது வகுப்பின் ஒரு மூலையில் போய் நின்றுகொள்ளவோ செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் அவர்.
ஆனால், அந்த கார்ட்டூன்களை காட்டுவதற்கு முன் இஸ்லாமிய மாணவர்கள் வெளியே செல்லுமாறு ஆசிரியர் கூறியதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் வேண்டுமென்றே வகுப்பை விட்டு வெளியேறாமல் நின்றதாகவும், அதனால் ஆசிரியர் தன்னை இரண்டு நாட்கள் பள்ளியிலிருந்து சஸ்பெண்ட் செய்துவிட்டதாகவும் தன் தந்தையிடம் சொல்லியிருக்கிறாள் அந்த பெண்.
அதைக் கேட்டு கோபமடைந்த அவளது தந்தையான Brahim Chnina (48), ஆசிரியர் Samuel Patyக்கு எதிராக பேஸ்புக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டதுடன், அவர் மீது பள்ளியிலும், பொலிசாரிடமும் புகாரும் அளித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவிய இந்த செய்திகள், தீவிரவாத எண்ணம் கொண்ட செசன்ய அகதியான Anzorov என்பவனை சென்றடைய, அவன் ஆசிரியர் Samuel Patyயை தலையை வெட்டிக் கொன்றுவிட்டான்.
ஆனால், அந்த வகுப்பிலிருந்த மாணவ மாணவிகள் பலரும் கார்ட்டூன்கள் குறித்து கூறும்போது அந்த மாணவி வகுப்பிலேயே இல்லை என்றும், ஆசிரியர் யாரையும் வகுப்பை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தவில்லை என்றும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், அந்த மாணவியின் தந்தையான Chnina, தான் முட்டாள்தனமாக நடந்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட என்னுடைய செய்திகளை தீவிரவாதிகள் பார்க்கக்கூடும் என நான் நினைத்துப் பார்த்ததேயில்லை, நான் அந்த செய்தியின் மூலம் யாரையும் துன்பப்படுத்தவும் விரும்பவில்லை.
ஆனால், அந்த செய்தியால் ஒரு வரலாற்று ஆசிரியரின் உயிர் போய்விடும், எல்லோரும் என்னை குற்றம் சாட்டுவார்கள் என கற்பனை செய்து பார்ப்பது கூட கடினமாக உள்ளது என்று கூறியுள்ளார் அவர்.
ஆனால், அவரது மகள் கூறிய ஒரு பொய், இரண்டு உயிர்களை வாங்கி, உலக நாடுகள் மத்தியில் பிரான்சுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்ட நிலையில், அடுத்து அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.