பிரான்சில் மாற்று மருத்துவ சிகிச்சை பெற்ற இருவர் மரணம்... என்ன சிகிச்சை எடுத்தார்கள் தெரியுமா?
கொரோனாவுக்கு ஏதாவது எளிமையான சிகிச்சை கிடைக்காதா என பல்வேறு சிகிச்சை முறைகளை நாடி மக்கள் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சூழலில், பிரான்சில் மாற்று மருத்துவ சிகிச்சை எடுத்த இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாற்று மருத்துவம் குறித்த ஒரு எச்சரிக்கை உணர்வு உருவாகியுள்ளது.
Loireஇல் வாழும் 44 வயது பெண் ஒருவர், வாரம் ஒன்றிற்கு 1,000 யூரோக்கள் செலுத்தி ஒரு மாற்று மருத்துவப் பயிற்சி செய்பவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார். அந்த ‘மருத்துவர்’ பரிந்துரைத்த சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருக்கும் சிகிச்சையைப் பின்பற்றிய அந்த பெண், பல நாட்கள் பட்டினி கிடந்து தன் அறையில் இறந்துகிடந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த சிகிச்சையளித்த்வரைப் பிடித்து விசாரித்தால், தனக்கும் அந்த மரணத்துக்கும் சம்பந்தமில்லை என்றும், அந்த பெண் கொரோனா தடுப்பூசி காரணமாக இறந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இன்னொரு 41 வயது ஆண், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர், இதேபோல் ஒருவரிடம் சிக்கிச்சைக்கு செல்ல, அந்த ‘மருத்துவர்’ அவரது கீமோதெரபி சிகிச்சையை நிறுத்திவிட்டு, உண்ணாவிரதம் போன்ற இயற்கை சிகிச்சைகளை எடுக்குமாறு கூறியுள்ளார்.
அவரது ஆலோசனையைக் கேட்ட அந்த நபர் சிகிச்சையை நிறுத்த, புற்றுநோயால் இறந்துபோனார். அவரது மனைவி அந்த ‘மருத்துவர்’ மீது புகாரளித்துள்ளார்.
இயற்கை முறை சிகிச்சைக்கு பிரான்சில் நெறிமுறைகள் எதுவும் வகுக்கப்படவில்லை. அத்துடன், இயற்கை முறை மருத்துவம் செய்வோர் நோய் கண்டறியவும் (diagnosis), மருந்துகள் பரிந்துரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.