கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த இரண்டு குடும்பங்கள்.. கடைசி நேரத்தில் கிடைத்த ஆறுதலளிக்கும் செய்தி
கனடாவிலிருந்து இரண்டு குடும்பங்கள் நாடுகடத்தப்பட இருந்த நிலையில், அவர்களை நாடுகடத்தும் திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள செய்தியை அடுத்து அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
மெக்சிகோ நாட்டவர்களான Luis Ubando Nolasco, Cinthya Carrasco Campos, மற்றும் முறையே எட்டு மற்றும் ஒன்பது வயதுடைய அவர்களுடைய இரண்டு மகள்கள் நேற்று கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த நிலையில், அவர்களை சந்தித்த எட்மண்டன் நாடாளுமன்ற உறுப்பினரும், பெடரல் சுற்றுலா அமைச்சருமான Randy Boissonnault, அவர்களுடைய நாடுகடத்துதல் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், ஆகவே, அவர்கள் மெக்சிகோ செல்லவேண்டாம் என்றும் கூற, மகிழ்ச்சியில் திளைத்துப்போயிருக்கிறார்கள் தம்பதியர்.
அதேபோல், இம்மாதம் (ஜூலை) 8ஆம் திகதி, Evangeline Cayanan என்ற பெண் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நாடுகடத்தப்பட இருந்த நிலையில், அவரது மகளும் கனேடிய குடிமகளுமான McKenna (6), அவருக்கு கனடாவில் யாரும் இல்லாததால் தன் தாயுடன் கனடாவை விட்டு வெளியேறும் நிலைக்கு ஆளாகியுள்ளதாக ஒரு செய்தி வெளியானது நினைவிருக்கலாம்.
PC: Paige Parsons/CBC
அவர்களுடைய நாடுகடத்தும் திட்டமும் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக Evangelineஉடைய சட்டத்தரணி தெரிவித்துள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தி கேட்டதும் தான் தரையில் விழுந்து கதறி அழுததாக Ubando தெரிவிக்கிறார். நாடுகடத்தப்போகிறோம் என்பதை எதிர்பார்த்து கவலையிலும் பதற்றத்திலும் இருந்த இரண்டு குடும்பங்களும் இப்போது ஆறுதலடைந்துள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
இந்த இரண்டு குடும்பங்களுக்கும் ஆதரவாக தொண்டு நிறுவனங்கள் பேரணிகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அந்த இரண்டு குடும்பங்களின் நாடுகடத்துதல் உத்தரவும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.