உக்ரைன் போரைத் தொடர்ந்து ஜேர்மனி எடுத்துள்ள இரண்டு முக்கிய முடிவுகள்
உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்பப்போவதில்லை என முடிவு செய்துள்ள ஜேர்மனி, எரிபொருள் தேவைகளுக்காக ரஷ்யாவுக்கு பதிலாக கனடாவுடனான ஒத்துழைப்பைப் பெற முயற்சி மேற்கொண்டுள்ளது.
முன்னதாக, உக்ரைனுக்கு உதவும் வகையில், ரஷ்ய தயாரிப்புகளான MiG-29 ஜெட் விமானங்களை ஜேர்மனியிலுள்ள அமெரிக்க இராணுவ தளத்துக்கு அனுப்பும் திட்டம் ஒன்றை போலந்து முன்வைக்க, அது நேட்டோ நாடுகளுக்கே பாதகமான முடிவாக முடியலாம் என்று கூறி, அந்த யோசனையை அமெரிக்கா நிராகரித்துவிட்டது.
இந்நிலையில், உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்பப்போவதில்லை என ஜேர்மனியும் முடிவு செய்துள்ளது.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் கூட்டு செய்தியாளர்கள் மாநாடு ஒன்றில் பேசிய ஜேர்மன் சேன்ஸலர் Olaf Scholz, ஜேர்மனி அனைத்துவகை பாதுகாப்பு உபகரணங்களையும், ஆயுதங்களையும் அளித்துள்ளதாகவும், ஆனாலும், போர் விமானங்களை அனுப்பும் திட்டம் அதில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மாநாட்டில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா, உக்ரைனுக்கு 50 மில்லியன் கனேடிய டொலர்கள் மதிப்பிலான ட்ரோன்களில் பொருத்தப்படும் கமெராக்கள் முதலான உபகரணங்களை அனுப்புவதாக தெரிவித்தார்.
இந்த போரின் தீவிரத்தைக் குறைக்கவே தாங்கள் விரும்புவதாகவும் ட்ரூடோ தெரிவித்தார்.
ட்ரூடோவும், Scholzம், தாங்கள் எரிபொருள் தொடர்பான விடயங்களில் ஒத்துழைப்பு, பருவநிலை மாற்றம், உக்ரைன் போர் முதலான விடயங்கள் குறித்து விவாதித்ததாக தெரிவித்தார்.
எரிவாயு ஜாம்பவானான ரஷ்யா போரில் இறங்கியுள்ளதால், அதற்கு மாற்றாக, கனடாவிலிருந்து எரிபொருட்களைப் பெற ஜேர்மனி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
கனடா, உலகின் நான்காவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளர் மற்றும் ஆறாவது பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.