ஒழுங்கா விளையாடலேன்னா அணியில் இடமில்லை! கடும் அழுத்தத்தை சந்தித்துள்ள 2 இந்திய வீரர்கள்
தென்னாப்பிரிக்கா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஞாயிறு அன்று தொடங்கவுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்பது பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. அணியின் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் கடந்த பல தொடர்களாகவே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கடும் அழுத்தத்திற்கு மத்தியில் இந்த முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ள இவர்கள் இருவரும் இந்த முதல் போட்டியில் சொதப்பும் பட்சத்தில் நிச்சயம் அவர்களுக்கு பதிலாக அவர்களது வாய்ப்பு ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் விஹாரிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் அண்மையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்த ஷ்ரேயாஸ் ஐயர் அறிமுக போட்டியிலேயே சதம் விளாசி தனது திறமையை நிரூபித்துள்ளார். அதே போன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் விஹாரியும் தனது நிரந்தர இடத்தை தேடி வரிசையில் காத்திருக்கிறார்.
இப்படி இவர்கள் இருவரும் அணியில் இணைய தயாராக இருக்கும் வேளையில் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் ரன்களை குவித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த தொடரில் அவர்கள் தங்களது திறமையை நிரூபிக்க தவறும் பட்சத்தில் நிச்சயம் இந்த தொடரோடு அவர்களது இடம் பறிபோகும் ஆபத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.