சுவிஸில் கொலையை தடுக்க முயன்ற பொலிசார் மீது கொலை வழக்கு விசாரணை
சுவிட்சர்லாந்தின் St. Gallen மாநிலத்தில் குடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய இளைஞரை சுட்டுக்கொன்ற விவகாரத்தில், இரு பொலிசார் தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்கின்றனர்.
தொடர்புடைய கொடூர சம்பவம் 2020 செப்டம்பர் 2ம் திகதி Speicherstrasse பகுதியில் நடந்துள்ளது. இப்பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வீட்டு வேலை செய்து வந்த 46 வயது பெண்மணியை வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் புகுந்து 22 வயது இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரிய வந்த இரு பொலிசார், உடனடியாக சம்பவப்பகுதிக்கு விரைந்துள்ளனர். பொலிசார் இருவரும் அந்த குடியிருப்புக்குள் நுழையும்போது, அந்த 46 வயது இத்தாலிய பெண்மணி ரத்தவெள்ளத்தில் கிடப்பதை கண்டுள்ளனர். விளையாட்டு சாமான்கள், நாற்காலி உள்ளிட்டவை இடம்பெயர்ந்தும் காணப்பட்டுள்ளன.
மட்டுமின்றி, அந்த இளைஞர் ரத்தவெள்ளத்தில் கிடந்த பெண்மணியின் தலையை தரையில் மோதியபடி இருந்துள்ளார். பொலிசார் இருவரும் இதனிடையே, குடியிருப்புக்குள் புகுந்து இளைஞரை எச்சரித்து, துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர்.
திடீரென்று அந்த இளைஞர் பொலிசார் முன்னிலையில் கட்லரி டிராயரைத் திறந்துள்ளார். ஆனால் கத்தியை பயன்படுத்த இளைஞர் முயற்சிப்பதாக கருதி, பொலிசார் இருவரும் தங்கள் துப்பாக்கியால் அந்த இளைஞரை சுட்டுள்ளனர்.
ஆனால் அவர் கத்தியை அல்ல, குறித்த பெண்மணியை தாக்கிய வாணலியை மீண்டும் எடுத்துள்ளதாக தெரிய வந்தது. பொலிசார் இருவரின் துப்பாக்கி குண்டுக்கு இரையான இளைஞர், தரையில் சரிந்துள்ளார்.
மொத்தம் 14 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் 10 குண்டுகள் இளைஞரின் உடம்பில் இருந்து வெளியெடுக்கப்பட்டுள்ளது. இரு பொலிசாரும் ஒரே நேரத்தில் துப்பாக்கியால் சுட்டதால், இதில் யார் சுட்டதில் இளைஞர் மரணமடைந்தார் என்ற குழப்பம் காரணமாக தற்போது இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், அவர்கள் மீது 13 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும், அந்த இத்தாலிய பெண்மணி மரணமடைந்த விவகாரத்திலும் வழக்கு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.