ராணியாரை இரண்டு முறை தனியாக சந்தித்து பேசிய இளவரசர் ஹரி: ரகசியம் உடைத்த அரண்மனை
தாத்தாவின் இறுதிச்சடங்குகளுக்காக பிரித்தானியா வந்திருந்த இளவரசர் ஹரி, யாரும் எதிர்பார்க்காத வகையில் ராணியாருடன் தனியாக இரண்டு முறை சந்தித்து பேசிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் காலமான நிலையில், இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்ள இளவரசர் ஹரி அமெரிக்காவில் இருந்து பிரித்தானியா திரும்பினார்.
தமது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் ஹரி மட்டுமே தனியாக நாடு திரும்பினார்.
இளவரசர் பிலிப் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த போதே, இளவரசர் ஹரி தமது தந்தையும் வருங்கால பிரித்தானிய மன்னருமான சார்லசுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அதில், அரச குடும்பத்தை அனுசரித்து நடப்பேன் என்பதே, அந்த கடிதத்தின் கருவாக கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென்று இளவரசர் பிலிப் காலமான தகவல் வெளியாக, அமெரிக்காவில் இருந்து ஹரி பிரித்தானியா திரும்பினார்.
மொத்தம் 9 நாட்கள் பிரித்தானியாவில் இருந்த இளவரசர் ஹரி, தமது தந்தை இளவரசர் சார்லஸ், சகோதரர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து தமது நிலை குறித்து விளக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, ராணியாருடன், இந்த 9 நாட்களில் இருமுறை தனியாக பேசும் வாய்ப்பையும் இளவரசர் ஹரி பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
ராணியாருடன் ஹரி என்ன பேசினார் என்பது தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றாலும், குடும்ப பிரச்சனை முடிவுக்கு வருவதன் முக்கிய அறிகுறியாகவே இது பார்க்கப்படுகிறது.
மேலும், இளவரசி Eugenie, அவரது பிறந்த குழந்தை ஆகஸ்ட் ஆகியோரையும் இளவரசர் ஹரி சந்தித்துள்ளார். இளவரசர் ஹரியின் இந்த வருகையானது, தனது தாத்தாவான இளவரசர் பிலிப்பிற்கு மரியாதை செலுத்துவது, மட்டுமின்றி துக்கத்தில் மூழிகியுள்ள ராணியாருக்கு ஆறுதலாக இருப்பது என்பது மட்டுமே என கூறப்படுகிறது.
குடும்ப பிரச்சனைகளை விவாதிக்கும் நேரம் இதுவல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே என்றாலும், வாய்ப்பு கிடைத்த போது அதையும் இளவரசர் ஹரி பயன்படுத்திக் கொண்டதாகவே அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், அரச குடும்பத்தின் முதன்மை உறுப்பினர்களை சந்தித்துக் கொண்டாலும், முக்கியமான விடயம் ஏதும் விவாதிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
தற்போதைய சூழல் அதற்கானது அல்ல என்றே அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, ராணியாரின் பிறந்தநாளுக்கு பிறகு இளவரசர் ஹரி அமெரிக்கா திரும்புவார் என கூறப்பட்டு வந்த நிலையில், மனைவியின் நிலையை கருத்தில் கொண்டு ஹரி அமெரிக்கா திரும்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.