வெளிநாட்டு பயணம்! விதவிதமான விஷ பாம்புகள்... ஆச்சரியம் கொடுக்கும் 2 தமிழர்கள்
பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் இரண்டு தமிழர்கள் பத்மஸ்ரீ விருது வாங்கும் நிலையில் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பாம்பு பிடிப்பதில் வல்லவர்கள்
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் மாசி சடையன், வடிவேல் கோபால். இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இவர்கள், பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருபவர்கள். இந்நிலையில்தான் உயரிய விருதான, பத்மஸ்ரீ விருது, இந்த ஆண்டு இவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாசி பேசுகையில், இந்த விருது கிடைத்துள்ளது பெருமையாக உள்ளது. நான் சிறுவனாக இருந்தபோது என் தந்தையுடன் சென்று பாம்பு பிடிக்க கற்றுக் கொண்டேன்.
வெளிநாட்டில்...
30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 15000 பாம்புகளை பிடித்திருப்பேன். மாமல்லபுரத்துக்குப் பக்கத்துல உள்ள வடநெம்மேலியில முதலை பண்ணையை நடத்திக்கிட்டு இருக்குற ரோமுலஸ் விட்டேக்கர் (Romulus Whitaker), ஆறு வருஷத்துக்கு முன்னாடி எங்களுக்கு அறிமுகமானார்.
அவர் வெளிநாட்டுக்காரர். அவரே செலவு செய்து தாய்லாந்துக்கு அழைச்சுகிட்டுப் போனார். அங்கு 18 அடி, 20 அடி நீளமுள்ள ரெண்டு ராஜநாகங்களைப் பிடிச்சு காட்டுப்பகுதியில விட்டோம். நாலு வருஷத்துக்கு முன்னாடி, ரோமுலஸ் விட்டேக்கர், எங்க ரெண்டு பேரையும் அமெரிக்கா அழைச்சுக்கிட்டுப் போய், இரண்டு மாதங்கள் தங்க வைத்தார்.
அங்குள்ள வயல்களில் பைத்தான் வகையைச் சேர்ந்த பாம்புகள் தொந்தரவு அதிகம் இருந்த நிலையில் 40 பாம்புகளை பிடித்தோம். இதை பார்த்த அங்கிருந்த மக்கள் எல்லாருமே வியந்தார்கள்.
நானும் வடிவேலுவும், வெளிநாடுகளில் பாம்பு பிடித்ததை பற்றி விட்டேக்கர் தான் இந்திய அரசுக்கு தெரியப்படுத்தி எங்கள் விருதுக்கு காரணமாக இருந்தார் என கூறியுள்ளார்.