லண்டன் தீவிபத்தில் உயிரிழந்த இரண்டு ஜோடி இரட்டையர்கள்... ஏராளமானோர் கூடி அஞ்சலி
கடந்த வியாழக்கிழமை, தெற்கு லண்டனிலுள்ள, Sutton என்ற இடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில், இரவு 7.00 மணியளவில் திடீரென தீப்பற்றியதில், அந்த வீட்டிலிருந்த நான்கு குழந்தைகள் பரிதாபமாக பலியானார்கள்.
Kyson மற்றும் Bryson (4) Leyton மற்றும் Logan (3) என்னும் அந்த இரண்டு ஜோடி இரட்டைக் குழந்தைகள் அந்த வீடு தீப்பிடிக்கும்போது, வீட்டில் தனியாக இருந்தது தெரியவந்தது.
பிள்ளைகளின் தந்தையான Dalton Hoath (28)ம், தாய் Deveca Rose (27)ம் பிரிந்துவிட்டிருக்கிறார்கள். தாய், பிள்ளைகளுடன் வாழ, தந்தை வேறிடத்தில் தனியாக வாழ்ந்துவந்திருக்கிறார்.
இந்நிலையில், நேற்று Suttonஇல் கூடிய ஏராளமானோர் பிள்ளைகளின் தந்தையான Daltonஉடன் இணைந்து நீல நிற பலூன்களை பறக்கவிட்டு பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
அவர்களுடன், அந்த வீட்டில் தீப்பிடித்தபோது அதை அணைத்த, பிள்ளைகளை புகையினூடே சென்று தூக்கி வந்து முதலுதவி அளித்த தீயணைப்பு வீரர்களும் சேர்ந்துகொண்டார்கள்.
பிள்ளைகளுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய Dalton, தான் தன் பிள்ளைகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வாக்கி வந்த பரிசுப்பொருட்கள் அனைத்தும் இன்னமும் பிரிக்கப்படாமலே இருப்பதாகவும், தன் பிள்ளைகள் அவற்றைத் திறந்து பார்க்கப்போவதே இல்லை என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இப்போதும், தன் பிள்ளைகள், அப்பா ஐ லவ் யூ என்று கூறுவது தன் காதுகளில் விழுகிறது என்கிறார் அந்த தந்தை.
இந்நிலையில், பிள்ளைகளை தனியாக விட்டுச் சென்றதால் குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 27 வயது இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.