ஜூனியர் உலகக்கோப்பையை வெல்லப்போவது யார்? : இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்
யு-19 எனப்படும் ஜூனியர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் இத்தொடரில் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி காலிறுதியில் தென் ஆப்ரிக்காவையும், அரையிறுதியில் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதேபோல் யஷ் துல் தலைமையிலான இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே அபாரமாக விளையாடி வெற்றிகளைக் குவித்து வந்தது.
அந்த அணி ஹாட்ரிக் வெற்றியுடன் நாக்ட் அவுட் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் காலிறுதியில் வங்கதேச அணியையும், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு ஜூனியர் உலகக்கோப்பையை வெல்லப்போவது யார்? என்பதை தீர்மானிப்பதற்கான போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
நார்த் சவுண்ட் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30க்கு தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்று 5வது முறையாக கோப்பையை வெல்ல இந்திய அணி வீரர்கள் முனைப்புடன் உள்ளனர். அதேசமயம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ள இங்கிலாந்து அணியும் 2வது முறையாக கோப்பையை கைப்பற்ற போராடும் என்பதால் இப்போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.