206 ரன் சேஸ் செய்து வங்காளதேசத்திற்கு மரணஅடி! ருத்ர தாண்டவமாடிய அமீரக கேப்டன்
ஷார்ஜாவில் நடந்த டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.
தன்ஸித் ஹசன் 59
வங்காளதேசம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஷார்ஜாவில் நடந்தது.
முதலில் ஆடிய வங்காளதேச அணியில் தன்ஸித் ஹசன், லித்தன் தாஸ் வலுவான கூட்டணி 55 பந்துகளில் 90 ஓட்டங்கள் குவித்தது.
அரைசதம் விளாசிய தன்ஸித் ஹசன் (Tanzid Hasan) 33 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் லித்தன் தாஸ் (Litton Das) 40 (32) ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து வந்த ஷாண்டோ 27 ஓட்டங்களும், டௌஹித் ஹ்ரிடோய் 24 பந்துகளில் 45 ஓட்டங்கள் விளாசினர்.
இதன்மூலம் வங்காளதேச அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 205 ஓட்டங்கள் குவித்தது. ஜவாதுல்லா 3 விக்கெட்டுகளும், சாஃஹிர் கான் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
முகமது வசீம் ருத்ர தாண்டவம்
அதனைத் தொடர்ந்து அமீரக அணியில் களமிறங்கிய முகமது ஸோஹைப் 38 (34) எடுத்து அவுட் ஆனார்.
அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினாலும், அணித்தலைவர் முகமது வசீம் சிக்ஸர்களை பறக்கவிட்டு ஸ்கோரை உயர்த்தினார். 42 பந்துகளை எதிர்கொண்ட முகமது வசீம் (Muhammad Waseem) 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 82 ஓட்டங்கள் குவித்தார்.
கடைசி கட்டத்தில் ஹைதர் அலி அதிரடியாக 6 பந்துகளில் 15 ஓட்டங்கள் விளாச, ஐக்கிய அரபு அமீரக அணி 19.5 ஓவர்களில் 206 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. சோரிபுல் இஸ்லாம், நாஹித் ராணா மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |