தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும்- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி எல்.ஐ.சி. அலுவலகம் எதிரில் மினி ஸ்டேடியம் கட்டும் பணியையும், கோபாலபுரத்தில் கட்டப்பட்டு வரும் குத்துச்சண்டை மைதானத்தையும் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது..,
மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்திற்கு நிதி வழங்க மாட்டோம் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது வன்மையாக கண்டனத்துக்குரியது.
கல்வியில் மட்டுமல்ல ஏற்கனவே ஒன்றிய அரசின் பட்ஜெட்டிலும் தமிழ் நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை.
ஒரு திட்டத்தை கூட ஒதுக்கவில்லை. ஆனால் வாய்க்கூசாமல் வரி கொடுத்துவிட்டு ஒவ்வொரு மாநிலமும் திருப்பி கேட்பது அநியாயம் என்று சொல்லி இருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது, முதலமைச்சர் இதை கண்டித்துள்ளார்.
எப்போதுமே தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான். பேரறிஞர் அண்ணா சொன்னது. நாங்கள் எந்த காலத்திலும் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதை குறுக்கு வழியில் திணிக்க முயன்றாலும், அதை எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் தமிழக அரசு அனுமதிக்காது. தமிழ்நாட்டு மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள்.
நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டதாக கூறினாலும் நாங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரங்கள் ஒன்றிணைந்த ஒன்றியம்தான் இந்தியா. ஆகவே ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு அடையாளம் உள்ளது. புரிதல் இருக்கிறது.
இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு. இங்கு இரு மொழி கொள்கைதான். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் படித்து தமிழில் பல விஞ்ஞானிகள், டாக்டர்கள் உலக சாதனை படைத்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே அதோடு இதை ஒப்பிட்டு கூறக்கூடாது. நிச்சயமாக மும்மொழிக் கொள்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். தமிழ்நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
எனவே தமிழகத்திற்கு இருமொழி கொள்கையை பின்பற்றுவதற்கு தேவயான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |