கடைசியில் மாநிலங்களையே ஒழிக்க தான்.., ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு உதயநிதி கண்டனம்
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உதயநிதி கண்டனம்
இந்திய தலைநகரான டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த மசோதா ஒப்புதல் தொடர்பாக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருப்பது இந்திய ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்.
ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் சர்வாதிகாரத்திற்கு களம் அமைக்கும் சதித்திட்டம் இது. எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களை ஆளுநர் மூலம் ஆளலாம் என்கிற தந்திரமும் இதில் உள்ளது.
இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைத்து, மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, கடைசியில் மாநிலங்களையே ஒழிக்க தான் ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ திட்டம் வழிவகுக்கும்.
பேராபத்தான இத்திட்டத்தை முதலமைச்சர் தலைமையில் வலிமையுடன் எதிர்ப்போம்! மாநிலங்களைக் காப்போம்!!" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |