பேப்பரை படிக்க சொன்ன முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதில்
சட்டமன்றத்தில் பேப்பர் படித்தால் நாட்டில் என்ன நடக்குதுன்னு தெரிந்து இருக்கும் என முதல்வர் விஜய் பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் கேள்வி
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 5 ஆகஸ்ட் முதல் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "தவெக அரசு அமைந்த பின்னர் மேகதாது தடுப்பணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு வேகம் காட்டி வருகிறது.

தமிழக அரசு இதுவரை செய்தது என்ன? அனைத்துக்கட்சி கூட்டத்தை விவாதிக்க ஆளும் அரசு தயங்குவது ஏன்? நம் மாநிலமும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை எப்போது கூட்ட போகிறீர்கள்" என பேசினார்.
பேப்பரை படிக்கச் சொன்ன முதல்வர் விஜய்
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் விஜய், "காவிரி பிரச்னையில் ஒரு முயற்சி எடுத்துப்பார்க்கலாமே என்று நினைத்துதான் பெங்களூரு பயணத்தை பற்றி யோசித்து கேட்டது நான்தான்.

இந்த பயணத்தால் அவமானம் நேர்ந்தால் என்னவாவது என்று கேட்டார்கள். தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்கிக்கொள்ள நான் தயார்.
காவிரி விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிப்பார். குறுவை சாகுபடிக்கு ஏற்கனவே அந்த நிவாரணம் கொடுத்தாச்சு.
இதுவந்து அரசியலே நாங்கள் தான் என்று சொல்லி கொள்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை. முன்ன, பின்ன பேப்பர் படித்து இருந்தால் நாட்டில் என்ன நடக்குதுன்னு தெரிந்து இருக்கும்" என கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் பதிலடி
இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "அரசு கொடுத்தது சிறப்பு தொகுப்பு. ஆனால் இப்போது விவசாயிகள் வறட்சி நிவாரண நிதி. இது ரெண்டுக்கும் வித்தியாசம் தெரிஞ்சுக்கோங்க.

இதுக்கு டெய்லி காலை பேப்பர் படிச்சா மட்டும் பத்தாது. விவசாயிகளை, அனைத்து கட்சிகளை சந்திக்கணும். தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டம் கூட்ட என்ன பயம்?" என்று பதிலடி கொடுத்தார்.
இதற்கு விளக்கமளித்த அவை முன்னவர் செங்கோட்டையன், "வறட்சி நிதி செப்டம்பர் மாதத்திற்கு பின் தான் கணக்கெடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |