தவெக அரசு மீது நம்பிக்கையில்லை- ஆளுநரை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் மனு
Udhayanidhi Stalin meets Tamil Nadu Governor- கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மனு அளித்தார்.
ஆளுநரை சந்தித்த உதயநிதி
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மனு அளிக்க வந்த நபரைத் தாக்கிய துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் நடைபெறும் பாலியல் குற்றங்களில் 80 சதவீதம் ஆளுங்கட்சியினரே ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகச் செயல்படாமல், முதலமைச்சர் குற்றவாளிகளுக்குத் துணை நிற்பதாக விமர்சித்தார். இதன் காரணமாகவே குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடர்பான புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தப் புகாரை மறைக்க அரசு மற்றும் தலைமைச் செயலாளர் முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.
கடந்த ஜூலை 31ஆம் தேதியே இந்தப் புகார் தலைமைச் செயலாளரிடம் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட உதயநிதி, இந்த விவகாரம் குறித்து முதலமைச்சருக்குத் தெரிவிக்கப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினார்.

முதலமைச்சருக்குத் தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவரும் இந்த விவகாரத்தில் குற்றவாளிதான் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்துப் பேசிய அவர், திமுக ஆட்சியில் இந்தப் பிரச்சினையைத் துணிவுடன் எதிர்கொண்டதாகவும், தவெக அரசு கூட்டணிக் கட்சிகளுக்காக இரட்டை வேடம் போடுவதாகவும் விமர்சித்தார்.
மேலும், நீதிமன்றத்தில் அரசு மன்னிப்புக் கேட்டுள்ள நிலையில், மக்களிடமும் முதலமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |