ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு, பிரித்தானிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டுத்துறை அலுவலகம், முக்கிய பயண தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஷெங்கன் பகுதியிலுள்ள (Schengen Area) நாடுகளுக்குள் நுழைவதற்கு முன்னும், அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்னும், பிரித்தானியர்கள் தங்கள் பாஸ்போர்ட்களை முத்திரையிடுவதை உறுதிசெய்துகொள்ளுமாறு அந்த அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. அப்படி முத்திரையிடாத பட்சத்தில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்றும் அந்த அலுவலகம் எச்சரித்துள்ளது.
ஷெங்கன் பகுதியில் அனுமதிக்கப்பட்ட 90 நாட்களுக்கு அதிகமாக பயணிகள் தங்கவில்லை என்பதை உறுதி செய்வதற்காக எல்லைகளில் அதிகாரிகள் பாஸ்போர்ட்டை சோதனையிடுவார்கள் என்பதால், இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அப்படி சரியான வகையில் உங்கள் பாஸ்போர்ட் முத்திரையிடப்படவில்லையென்றால், எல்லை அதிகாரிகள், அனுமதிக்கப்பட்ட காலகட்டத்தைவிட அதிக நாட்கள் நீங்கள் தங்கிவிட்டதாக கருதக்கூடும் என்பதால் இந்த ஆலோசனை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010 டிசம்பர் 31 வரை, ஐரோப்பிய ஒன்றியத்தாராக பிரித்தானியர்கள் கருதப்பட்டதால், அவர்கள் ஷெங்கன் பகுதிக்குள் பயணிக்க அவர்களது அடையாள அட்டை மட்டுமே போதுமானதாக இருந்தது. ஆனால், 2021 ஜனவரி முதல், பிரித்தானியர்கள் தங்கள் பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்க முடியும்.
இதுபோக, பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஷெங்கன் பகுதிக்கு பயணம் செய்யும்போது, கீழ்க்கண்ட ஆவணங்களையும் தங்களுடன் வைத்திருக்குமாறும் பிரித்தானிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டுத்துறை அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
- ஐரோப்பிய மருத்துவக் காப்பீட்டு அட்டை
- பயணக் காப்பீடு
- முறையான பயணச்சீட்டு
- தங்குவதற்கு போதுமான பணம்
- நீங்கள் எங்கு தங்கியிருந்தீர்களோ, அங்கு தங்கியிருந்ததற்கான ஆதாரம்
- மேலும், கொரோனா தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரமும் அவசியம்.
அதே நேரத்தில், இன்னொரு வகையில் கூறினால், பிரித்தானிய பயணிகள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், ஷெங்கன் பகுதிக்கும் இப்போது அத்தியாவசியமற்ற காரணங்களுக்காகவும் பயணிக்கலாம், தாங்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றிருப்பதை நிரூபிக்கும் பட்சத்தில் மட்டும்!