பிரித்தானிய விமான நிலையங்களில் உருவாகியுள்ள எதிர்பாராத பிரச்சினை
பிரித்தானிய விமான நிலையங்களில், தானியங்கி மின்னணு நுழைவாயில்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக, பிரித்தானியாவுக்கு வரும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
என்ன பிரச்சினை?
பிரித்தானிய விமான நிலையங்களில், விமானப்பயணிகள் விமான நிலையத்திற்குள் நுழையும் e-gates என்னும் மின்னணு அல்லது தானியங்கி விமான நிலைய நுழைவாயில்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக, இந்த மின்னணு நுழைவாயில்களில் இருக்கும் ஒரு கருவி மீது பாஸ்போர்ட்டை வைத்தால், அந்தக் கருவி, பாஸ்போர்ட்டிலுள்ள மின்னணு சிப்பை சோதித்து, அதன் உரிமையாளரை அடையாளம் கண்டு, தானாக கதவைத் திறந்து அவரை விமான நிலையத்திற்குள் அனுமதிக்கும்.
அந்த தானியங்கி நுழைவாயிலில் பிரசினை ஏற்பட்டால், அது திறக்காது, விமான நிலைய அதிகாரிகள் ஒவ்வொரு பயணியாக சோதித்து விமான நிலையத்திற்குள் அனுமதிக்கவேண்டியிருக்கும்.
தற்போது, அந்த மின்னணு கதவுகளில் ஏதோ தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடலாம்
ஆகவே, இப்போது விமான நிலையத்திற்குள், அதாவது, பிரித்தானியாவுக்குள் நுழையும் பயணிகளை ஒவ்வொருவராக விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்துதான் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கவேண்டும்.
இந்த பிரச்சினை நேற்று இரவு துவங்கிய நிலையில், அதன் காரணமாக, பிரித்தானியா வரும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடலாம் என யூனியன் ஒன்று எச்சரித்துள்ளது.
பிரித்தானியாவில் உள்ள விமான நிலையங்களில் எதிலெல்லாம் இந்த மின்னணு தானியங்கிக் கதவுகள் பயன்படுத்தப்படுகின்றனவோ, அத்தனை விமான நிலையங்களிலும் இந்த பிரச்சினை காணப்படுகிறது.
உண்மையில் என்ன பிரச்சினை என்பது தெரியவில்லை. காரணம், இது ஒரு சென்சிட்டிவான விடயம் என்பதால் அது குறித்து எதுவும் கூற இயலாது என உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது வார இறுதி என்பதாலும், வங்கி விடுமுறையும் உள்ளதாலும், ஏராளம் மக்கள் விமானங்களில் பயணம் செய்வார்கள் என்பதால், இப்படிப்பட்ட ஒரு நேரத்தில் இந்த பிரச்சினை உருவாக்கியுள்ளதால், பயணிகள் தாமதங்களை எதிர்கொள்ள நேரிடும் என விமான நிலைய அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.
அத்துடன், பிரித்தானிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து விமான நிலைய ஊழியர்களும் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பிரித்தானியாவிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.