பிரித்தானியாவில் ஆகஸ்ட் 23-க்குள் இது நடக்கும்! சுகாதார அமைச்சர் முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவில் 16 மற்றும் 17 வயது பிள்ளைகள் அனைவருக்கும் ஆகஸ்ட் 23-ஆம் திகதிக்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களுக்கு சில பாதுகாப்பு இருப்பதை உறுதிசெய்யவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சஜித் ஜாவித் கூறுகையில், "பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஏற்கனவே தடுப்பூசியைப் பெற்றிருப்பது புத்திசாலித்தனமானது. நாடு முழுவதும் கோவிட் -19க்கு எதிரான எங்கள் பாதுகாப்புச் சுவரை மேலும் உருவாக்க உதவிய அவர்களுக்கு நன்றி.
ஆகஸ்ட் 23, திங்கள், 16 மற்றும் 17 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்குவதை உறுதி செய்யுமாறு இங்கிலாந்தில் உள்ள என்ஹெச்எஸ்ஸிடம் நான் கேட்டுக் கொண்டேன்.
தயவுசெய்து தாமதிக்காதீர்கள் - உங்களால் முடிந்தவரை உங்கள் தடுப்பூசியை பெறுங்கள். இதனால் நாம் தொடர்ந்து இந்த வைரஸுக்கு எதிராக பாதுகாப்பாக வாழ முடியும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் சமூகத்திற்கும் தேவையான பாதுகாப்பை வழங்குவதன் மூலம் உங்கள் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.
16 மற்றும் 17 வயதிற்குட்பட்டவர்களுக்காக 800-க்கும் மேற்பட்ட தடுப்பூசி தளங்கள் திறக்கப்படும். விரைவில் உங்களுக்கான அழைப்புக் கடிதங்களை எதிர்பார்க்கலாம். அதனைத்தொடர்ந்து உங்களுக்கான தடுப்புசி ஸ்லோட்டை புக் செய்து பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார்.