பிரித்தானியாவில் புதிய விதி: சாக்கெட்டில் நேரடியாக சோலார் பேனல்களை இணைக்கும் வசதி
UK allows plug-in solar panels for homes: பிரித்தானியாவில் வீடுகளுக்கு மின்சாரச் செலவை குறைக்கும் புதிய முயற்சி இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உள்ள குடும்பங்கள், 800 வாட் திறன் கொண்ட சோலார் பேனல் கிட்களை நேரடியாக வீட்டின் சாக்கெட்டில் இணைத்து மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.

இந்த விதிமாற்றம் 27 ஆகஸ்ட் 2026 முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இதன் மூலம், வீடுகள் தங்களின் மின்சார தேவையின் 20 சதவீதம் வரை சோலார் மூலம் பூர்த்தி செய்ய முடியும். மேலும், வருடத்திற்கு 110 பவுண்டு வரை மின்சாரச் செலவை குறைக்கலாம் என எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நெட் சீரோ துறை தெரிவித்துள்ளது.
இதுவரை, சோலார் பேனல்கள் நிறுவுவதற்கு ஆயிரக்கணக்கான பவுண்டுகள் செலவாகி, பெரும்பாலும் வீட்டு உரிமையாளர்களுக்கே மட்டுமே சாத்தியமாக இருந்தது. ஆனால், புதிய விதிமுறையால் வாடகை வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சிறிய வீடுகளிலும் சோலார் பேனல்கள் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த சோலார் கிட்கள், இரண்டு பேனல்கள் வரை இணைக்கக்கூடிய 800 வாட் மைக்ரோ-இன்வெர்டரை கொண்டுள்ளன. பேனல்கள் உற்பத்தி செய்யும் DC மின்சாரத்தை, இன்வெர்டர் AC-ஆக மாற்றி, வீட்டின் சாதாரண மின்சார வலையமைப்பில் பயன்படுத்த முடியும்.
பிரித்தானிய எரிசக்தி செயலாளர் மியாட்டா ஃபான்புல்லா, “இந்த கோடைக்காலத்திலிருந்து, மேலும் பல குடும்பங்களுக்கு சுத்தமான, வீட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது. இது எளிமையானதும், மலிவானதும்” என தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றத்தை வரவேற்றுள்ள பசுமை ஆற்றல் அமைப்புகள், “சோலார் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கச் செய்யும் முக்கிய முன்னேற்றம்” எனக் கூறியுள்ளன.
பாதுகாப்பு விதிமுறைகளும் கடுமையாக உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சோலார் கிட் மட்டுமே பயன்படுத்த அனுமதி உள்ளது. மேலும், நீட்டிப்பு வயர் அல்லது மல்டி-அடாப்டர்களில் இணைக்க முடியாது.
இந்த புதிய முயற்சி, பிரித்தானியாவில் சோலார் பயன்பாட்டை அதிகரித்து, எரிசக்தி தற்சார்பையும், குடும்பங்களின் செலவையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |