பிரித்தானியாவில் இளம் பிள்ளைகளுக்கு செலுத்த மேலும் ஒரு Covid-19 தடுப்பூசிக்கு அங்கீகாரம்!
மாடர்னாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்த பிரித்தானிய மருத்துவ கண்காணிப்பு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஃபைசர் தடுப்பூசிக்குப் பிறகு, 12 முதல் 17 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு செலுத்த அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது கோவிட் -19 தடுப்பூசி இதுவாகும்.
மாடர்னாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு மருந்துகள் மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் (MHRA) இன்று (செவ்வாய்க்கிழமை) அதன் ஒப்புதலை வழங்கியுள்ளது. இது 'இந்த வயதினருக்கு பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது' என்று கூறியுள்ளது.
தற்போது, 12 முதல் 15 வயது வரையுள்ள சில குழந்தைகளுக்கு மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடியதாகக் கருதப்பட்டால் மட்டுமே ஃபைசர் தடுப்பூசி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஸ்பைக்வாக்ஸ் (Spikevax) தடுப்பூசி என்று அழைக்கப்படும் மாடர்னா தடுப்பூசியை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்பது குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பு தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டு குழுவிற்கு (JCVI) உள்ளது.
இந்த செய்தியை வரவேற்று, சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர், அரசாங்கம் இப்போது JCVI-யிடம் அதன் முறையான பரிந்துரையைக் கேட்டதாகவும் கூறினார்.