ஒரு டோஸ் 1.79 மில்லியன் பவுண்டு!! உலகின் விலையுயர்ந்த மருந்துக்கு பிரித்தானியா அங்கீகாரம்
பிரித்தானியாவின் சுகாதார அமைப்பான NHS இப்போது உலகின் மிக விலையுயர்ந்த ஒரு மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
முதுகெலும்பு தசைக் குறைபாடு (SMA) எனும் ஒரு அரிய மரபணு கோளாறால் பாதிக்கப்பட்ட புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்காக இந்த பிரத்தியேக மருந்துக்கு NHS ஒப்புதல் அளித்துள்ளது.
Zolgensma என்று அழைக்கப்படும் இந்த மருந்து சிகிச்சைக்கு ஒரு டோஸுக்கு 1.79 மில்லியன் டொலர் செலவாகிறது.
இங்கிலாந்தின் என்.எச்.எஸ் அறிக்கையின்படி, எஸ்.எம்.ஏ (Spinal Muscular Atrophy) பக்கவாதம், தசை பலவீனம் மற்றும் முற்போக்கான இயக்க இழப்பை ஏற்படுத்துகிறது.
கடுமையான Type-1 SMA உடன் பிறந்த குழந்தைகளின் ஆயுட்காலம் வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே.
NHS England தலைமை நிர்வாகி Sir Simon Stevens கூறுகையில், “இந்த ஒப்பந்தம் இந்த கொடூரமான நோயால் பாதிக்கப்பட்ட குழ்நதைகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடிய ஒன்றாக அமையும்" என்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், “NHS இன்னும் கொரோனாவுக்கு மத்தியில் உண்மையான அழுத்தத்தில் உள்ளது. அதற்காக தடுப்பூசி திட்டத்தை வழிநடத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது என்றாலும், இன்றைய ஒப்பந்தம் NHS மில்லியன் கணக்கான பிற நோயாளிகளையும் கவனித்து வருகிறது என்பதற்கான முக்கியமான நினைவூட்டலாகும்" என்றார்.