லண்டனில் சீனாவின் மெகா தூதரகம் அமைக்க பிரித்தானிய அரசு ஒப்புதல்
பிரித்தானிய அரசு, லண்டனின் மையப்பகுதியில் சீனாவின் புதிய மெகா தூதரகத் திட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த தூதரகம், 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாகவுள்ளது. இது ஐரோப்பாவில் மிகப்பெரிய சீன தூதரகமாகக் கருதப்படுகிறது.
சீனாவின் உளவு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் குறித்த எச்சரிக்கைகள் காரணமாக, இந்த முடிவு பல ஆண்டுகளாக தாமதமாகி வந்தது
எதிர்க்கட்சிகள், “இது பிரித்தானிய தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து” என்று கடுமையாக விமர்சித்துள்ளன.

அரசு தரப்பில், “சீனாவின் தூதரகங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைப்பது பாதுகாப்பு நன்மைகளை தரும்” எனவும், MI5 மற்றும் GCHQ உள்ளிட்ட உளவுத்துறைகள் முழுமையாக ஈடுபட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தூதரகம் அமைக்கப்படவுள்ள Royal Mint Court பகுதி, லண்டனின் நிதி மையத்துக்கு அருகில் உள்ளது.
அங்கு செல்லும் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலம் பெருமளவு தரவு பரிமாற்றம் நடைபெறுவதால், சீனாவின் கண்காணிப்பு அபாயம் குறித்து உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர்கள், “பிரிட்டிஷ் ஹொங்ஹொங் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பும், தரவு பாதுகாப்பும் ஆபத்தில் ஆழ்த்தப்படும்” என்று எச்சரித்துள்ளனர்.
கன்சர்வேட்டிவ், லிபரல் டெமோக்ராட்ஸ், ரீஃபார்ம் யுகே ஆகிய கட்சிகள் இந்த முடிவை கடுமையாக எதிர்த்துள்ளன.
சீனா, 2018-ஆம் ஆண்டு 255 மில்லியன் பவுண்டுகளுக்கு இந்த நிலத்தை வாங்கியிருந்தது. 2022-இல் உள்ளூர் கவுன்சில் இத்திட்டத்தை நிராகரித்தபோதும், 2024-ல் மீண்டும் விண்ணப்பித்ததில் அரசு நேரடியாக அனுமதி வழங்கியுள்ளது.
இந்த முடிவு, சீனா-பிரித்தானியா உறவுகளை வலுப்படுத்தும் முயற்சி எனக் கருதப்படுகின்றது. ஆனால், விமர்சகர்கள், “சீனாவின் உளவு நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டு எதிர்ப்பாளர்களை அச்சுறுத்தும் முயற்சிகள்” காரணமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |