புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம்
பிரித்தானியாவில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளவர்கள், தங்களுக்காக அரசு செய்த செலவை திருப்பிச் செலுத்தும் வகையில் புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட உள்ளது.
10,000 பவுண்டுகள்...
பிரித்தானியாவில் புகலிடம் கோருபவர்களை தங்கவைப்பதற்காக, பிரித்தானிய அரசு நாளொன்றிற்கு 23.25 பவுண்டுகள் செலவிடுகிறது.
அதுவே, ஹொட்டல்களில் தங்கவைப்பதற்கு என்றால், 144 பவுண்டுகள் செலவிடப்படுகிறது.

அவ்வகையில், கடந்த ஆண்டில் மட்டும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக 4 பில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக அரசு இவ்வளவு செலவு செய்கிறது. ஆகவே, நாளை அவர்கள் சம்பாதிக்கத் துவங்கும்போது, தங்களுக்காக அரசு செய்த செலவை திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார் பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத்.
ஆக, மாணவர்கள் தாங்கள் கல்வி கற்பதற்காக வாங்கிய கடனை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துத் தீர்ப்பதுபோல், புகலிடக்கோரிக்கையாளர்களும், தாங்கள் வேலைக்கு செல்லத் துவங்கியதும், தோராயமாக 10,000 பவுண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துத் தீர்க்கும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டுவர பிரித்தானியா திட்டமிட்டுவருகிறது.

இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புலம்பெயர்தல் மற்றும் புகலிட மசோதாவில் இந்த விடயமும் இடம்பெற உள்ளது.
விடயம் என்னவென்றால், அந்த 10,000 பவுண்டுகளை புகலிடக்கோரிக்கையாளர்கள் செலுத்தித் தீர்த்தால்தான், பிரித்தானியாவில் அவர்கள் குடியமருவதற்கான அடுத்த கட்ட முயற்சிகளை அவர்கள் துவக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |