பிரித்தானியாவில் வீட்டில் இறந்து கிடந்த குழந்தை வழக்கில் முக்கிய திருப்பம்: சித்தி பேசும் வீடியோ வெளியானது
பிரித்தானியாவில் பாகிஸ்தான் வம்சாவளியினரான சிறுமி ஒருத்தி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், அதிரடி திருப்பமாக, சிறுமியின் சித்தி பொலிசாரிடம் பேச முன்வந்துள்ளார்.
வீட்டில் இறந்துகிடந்த குழந்தை
ஆகத்து மாதம் 10ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள Woking என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாள் சாரா (Sara Sharif, 10), என்னும் சிறுமி.
உடற்கூறு ஆய்வில், அவளது உடலிலிருந்த காயங்கள், நீண்ட நாட்களாக அவள் தாக்கப்பட்டுவந்ததை உறுதி செய்தன. ஆனாலும், அவள் எதனால் மரணமடைந்தாள் என்பது தெரியவரவில்லை.
Pic: AP
சாராவின் உடல் கண்டெடுக்கப்படுவதற்கு முந்தைய தினம், சாராவின் தந்தையான ஷெரீஃப் (Urfan Sharif) அவரது இரண்டாவது மனைவியான பட்டூல் (Beinash Batool) மற்றும் ஷெரீஃபின் சகோதரரான மாலிக் (Faisal Shahzad Malik) ஆகியோர், தம்பதியரின் ஐந்து பிள்ளைகளுடன் பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றுள்ளார்கள். அவர்களை பொலிசார் தேடி வருகிறார்கள். சாரா, ஷெரீஃபின் முதல் மனைவியான ஓல்கா (Olga Sharif)க்கு பிறந்தவர் ஆவார்.
வழக்கில் முக்கிய திருப்பம்
சந்தேகம் முழுவதும் சாராவின் தந்தை மற்றும் சித்தியை நோக்கி திரும்பியிருந்த நிலையில், தற்போது வழக்கில் ஒரு முக்கிய விடயம் நிகழ்ந்துள்ளது.
சாராவின் தந்தை அருகில் அமர்ந்திருக்க, சாராவின் சித்தியான பட்டூல் பேசும் வீடியோ ஒன்றை தம்பதியர் வெளியிட்டுள்ளார்கள்.
எழுதி வைத்துள்ள அறிக்கை ஒன்றை வாசிக்கும் பட்டூல், சாராவின் மரணம் ஒரு விபத்து என்று கூறியுள்ளார். அத்துடன், சாரா குறித்து ஊடகங்கள் பரப்பிய செய்தியால் தங்கள் குடும்பம் பிரச்சினைகளை சந்தித்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் தாங்கள் தலைமறைவாக இருப்பதாகத் தெரிவிக்கும் பட்டூல், தங்களால் வீட்டை விட்டு வெளியே செல்லமுடியவில்லை என்றும், வீட்டிலிருந்த மளிகைப்பொருட்கள் எல்லாம் காலியாகிவிட்டதால் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
எல்லாவற்றிற்கும் மேல், தாங்கள் பிரித்தானிய அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க விரும்புவதாகவும், வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார் பட்டூல்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |