ஒரே நேரத்தில் 8 அரசு பணிகளில் வேலை செய்து பிரித்தானிய ஊழியர் மோசடி
UK Civil Servant’s 349K Pound Job Scam Trial: பிரித்தானியாவில் ஒருவர் ஒரே நேரத்தில் 8 அரசு பணிகளில் வேலை செய்து சம்பளம் பெற்று மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
ரூ.3.5 கோடி சம்பாதித்ததாக குற்றச்சாட்டு
பிரித்தானியாவில் பணிபுரியும் அரசு ஊழியர் காஷிம் சௌத்ரி (55), 2020 முதல் 2023 வரை எட்டு அரசு பணிகளில் வேலை செய்து 349,378 பவுண்டு (சுமார் ரூ.3.5 கோடி) சம்பாதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவருக்கு ஒரே நேரத்தில் ஐந்து முழுநேர வேலைகள் இருந்ததாகவும், வாரத்திற்கு 183 மணி நேரம் வேலை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இது ஒரு வாரத்தில் உள்ள நேரத்தை விட அதிகம் என வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.
பல்வேறு அரசு அமைப்புகளில் வேலை
சௌத்ரி, உணவு தரநிலைகள் அமைப்பு, உள்துறை அமைச்சகம், வணிக மற்றும் வர்த்தக துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அமைப்புகளில் வேலை பெற்றதாக கூறப்படுகிறது. அவர் ஒன்பது மோசடி குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
நீதிமன்றத்தில், அவர் பல்வேறு ஓன்லைன் கூட்டங்களில் கமெராவை அணைத்தபடி கலந்து கொண்டதாகவும், “லேப்டாப் பிரச்சனை” என்று கூறியதாகவும் சாட்சிகள் தெரிவித்தனர்.
மேலும், சில நேரங்களில் உடல்நலக்குறைவு காரணமாக வேலை செய்ய முடியவில்லை எனவும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரின் முன்னாள் மேலாளர், சௌத்ரியின் வேலை திறன் குறைவாக இருந்தது என்றும், அவரை நிரந்தர ஊழியராக மாற்றிய முடிவுக்கு எதிராக இருந்ததாகவும் சாட்சியம் அளித்தார்.
தற்போது, இந்த வழக்கு லண்டனின் சவுத்வர்க் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |