எவரெஸ்ட் சிகரத்தை 10 முறை அளந்த பிரித்தானியர்... இன்னொரு மலைச்சிகரத்தில் ஏற்பட்ட துயரம்
எவரெஸ்ட் சிகரத்தை 10 முறை அளந்த பிரித்தானிய ஜாம்பவான் ஒருவர் அன்னபூர்ணா மலைச்சிகரத்தில் இருந்து கீழிறங்கும் போது பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
அன்னபூர்ணா மலைச்சிகரம்
வடக்கு ஐரிஷ் வீரர் நோயல் ஹன்னா என்பவரே நேபாளத்தில் உள்ள நான்காவது முகாமில் வைத்தே அன்னபூர்ணா மலைச்சிகரத்தில் இருந்து கீழிறங்கிய நிலையில் மரணமடைந்துள்ளார்.
Image: noelhanna.com
ட்ரோமாரா கிராமத்தில் பிறந்த நோயல் ஹன்னா வியக்கவைக்கும் வகையில் 10 முறை எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு சென்று திரும்பியுள்ளார். மட்டுமின்றி. உலகின் இரண்டாவது மிக உயரமான மலைச்சிகரமான K2-வுக்கு சென்று திரும்பிய அயர்லாந்தை சேர்ந்த முதல் நபரும் இவர் தான்.
நோயல் ஹன்னாவின் எதிர்பாராத மரணம் சக மலையேறும் வீரர்களை உலுக்கியுள்ளது. பலரும் அவருடனான தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
இதனிடையே, பல சாதனைகள் புரிந்துள்ள இந்தியாவின் மலையேற்ற வீராங்கனை பல்ஜீத் கவுர் என்பவரும் அன்னபூர்ணா மலைச்சிகரத்தில் இருந்து கீழிறங்கும் போது காணாமல் போன நிலையில், தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மூன்று வழிகாட்டிகளும் மாயம்
இன்னொரு இந்திய மலையேற்ற வீரர் அனுராக் மாலூ, முந்தைய நாள் நான்காம் முகாமில் இருந்து இறங்கும் போது 6,000 மீற்றர் உயரத்தில் இருந்து பள்ளத்தில் விழுந்து காணாமல் போனார். மட்டுமின்றி, மலையேற்ற வீரர்களுக்கான மூன்று வழிகாட்டிகளும் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Image: noelhanna.com
அன்னபூர்ணா மலைச்சிகரமானது உலகின் மிக உயரமான மலைகளில் ஒன்றாகும், இது இமயமலையில் அமைந்துள்ளது. இந்த அன்னபூர்ணா மலைச்சிகரத்தில் ஒரு கட்டத்திற்கு மேல் ஆக்ஸிஜன் அளவு குறைவாக காணப்படும் என்பதால் மனிதர்களால் எதிர்கொள்ள முடியாமல் போகும் என கூறப்படுகிறது.
அதிக உயிர்ப்பலி வாங்கும் இந்த மலைச்சிகரமானது எவரெஸ்ட்டை விடவும் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது மட்டுமின்றி அடிக்கடி பனிச்சரிவுகளுக்கும் இலக்காகிறது.