பிரித்தானியாவை உலுக்கிய 2 வயது குழந்தை வெடிவிபத்தில் உயிரிழந்த சம்பவம்: விசாரணையில் திடீர் திருப்பம்
பிரித்தானியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய Heysham வெடிவிபத்து சம்பவத்தில் புதிய திருப்பமாக சந்தேகத்தின்பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் லங்காஷயர் கவுண்டியில், Heysham நகரத்தில், Mallowdale Avenue-ல் உள்ள எண்.18 வீட்டில் எரிவாயு கசிந்து வெடிவிபத்து ஏற்பட்டதில், ஜார்ஜ் ஆர்தர் ஹிண்ட்ஸ் (George Arthur Hinds) எனும் 2 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
கடந்த மே மாதம் 16-ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) இந்த கொடூர சம்பவம் நடந்தது. அவனது பெற்றோர் Vicky Studholme மற்றும் Stephen Hinds இருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது ஆனால், அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை.
அவர்களைத் தவிர மேலும் 2 பேர் சிறு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
சம்பவம் தொடர்பாக துப்பறிவாளர்கள் ஆய்வு நடத்தியதில், எண்.20 வீட்டில் துண்டிக்கப்பட்ட ஒரு எரிவாயு குழாய் தான் வெடிவிபத்துக்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் காரணமாக, இந்த சம்பவம் ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று (செவ்வாக்கிழமை) சந்தேகத்தின் பேரில் லங்காஷயர் பொலிஸார் 4 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
படுகொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 44 வயது ஆண் மற்றும் 51 வயது பெண் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மற்றோரு 54 வயது ஆணை திருட்டு, குற்றவியல் சேதம் மற்றும் மின்சாரம் பிரித்தெடுத்தல் ஆகிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
மேலும், திருடப்பட்ட பொருட்களை கையாண்டதாக சந்தேகத்தின் பேரில் 47 வயதான மற்றோரு ஆடவர் கைது செய்யப்பட்டார். தற்போது இவர்கள் இருவரும் கூட விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சில மேலதிக விசாரணைக்கு பிறகு இந்த சம்பவம் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



