மின்சார வாகன விற்பனையை குறைக்க பிரித்தானிய அரசு திட்டம்
UK cuts 2030 EV sales target to 60 percent amid concerns: மின்சார வாகன விற்பனையை குறைக்க பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது.
மின்சார வாகன விற்பனையை குறைக்க திட்டம்
பிரித்தானிய அரசு 2030-ஆம் ஆண்டுக்கான மின்சார வாகன (EV) விற்பனை இலக்கை கணிசமாகக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது நடைமுறையில் உள்ள திட்டத்தின் படி, 2030-ஆம் ஆண்டில் புதிய கார் விற்பனையில் 80 சதவீதம் ‘Zero Emission Vehicles’ (ZEV) ஆக இருக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த இலக்கை சுமார் 60 சதவீதமாக குறைக்கும் முடிவை அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ZEV கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், வாகன உற்பத்தியாளர்கள் ஆண்டுதோறும் அதிகரிக்கும் அளவில் மாசு வெளியீடு இல்லாத வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
2026-ஆம் ஆண்டிற்கான இலக்கு 33 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 2030-ஆம் ஆண்டில் அது 80 சதவீதமாகவும், 2035-ஆம் ஆண்டில் 100 சதவீதமாகவும் உயர்த்த திட்டமிடப்பட்டது.
எனினும், உலகளாவிய சப்ளை செயின் பிரச்சினைகள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான நுகர்வோர் தேவை எதிர்பார்த்த அளவிற்கு அதிகரிக்காதது போன்ற காரணங்களால் கார் உற்பத்தியாளர்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் தற்போதைய இலக்குகளை அடைவது கடினம் என அவர்கள் அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட தகவலின்படி, பிரித்தானியாவில் இந்த ஆண்டு இதுவரை புதிய கார் விற்பனையில் பேட்டரி மின்சார வாகனங்களின் பங்கு 26.6 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது 2026-ஆம் ஆண்டுக்கான 33 சதவீத இலக்கை விட குறைவாகும் என்று Society of Motor Manufacturers and Traders (SMMT) தெரிவித்துள்ளது.
இதையடுத்து, வாகனத் துறையின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அரசு தனது மின்சார வாகன கொள்கையில் மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ZEV திட்டத்தின் மீதான அர்ப்பணிப்பில் அரசு உறுதியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |