புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த சீன பொலிசாரின் உதவி: பிரித்தானியா புதிய ஒப்பந்தம்
சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் சீனாவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள இருக்கிறது பிரித்தானியா.
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த சீன பொலிசாரின் உதவி
சிறுபடகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது பிரித்தானியா அரசு.

படகுகளை தடுத்து நிறுத்த பிரான்சுடன் ஒப்பந்தம், படகுகளை சேமித்துவைக்கும் ஜேர்மனியுடன் ஒப்பந்தம் என பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்துவரும் பிரித்தானியா, அடுத்தபடியாக, சீனாவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள இருக்கிறது.
அதாவது, சட்டவிரோத புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயைக் கடக்க பயன்படுத்தும் சிறுபடகுகளின் எஞ்சின்களில் 60 சதவிகிதத்துக்கும் அதிகம் சீனாவில்தான் தயாரிக்கப்படுகின்றன.
ஆகவே, அந்த எஞ்சின்கள் ஆட்கடத்தல்காரர்களுக்குக் கிடைப்பதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பிரித்தானிய சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதில் சீன பொலிசார் உதவ இருக்கிறார்கள்.
அத்துடன், இரு நாட்டு அதிகாரிகளும் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் தகவல் பரிமாற்றங்களையும் செய்துகொள்ள இருக்கிறார்கள்.

இந்த விடயங்கள் தொடர்பில் பிரித்தானியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாக உள்ளது.
அந்த ஒப்பந்தம் தொடர்பில் பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் சீனா சென்றுள்ள நிலையில், எட்டு ஆண்டுகளில் முதன்முறையாக சீனா செல்லும் பிரித்தானிய பிரதமர் என்னும் பெருமைக்கும் உரியவராகிறார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |