பறக்கும் கார்களுக்கான சிறிய விமான நிலையத்தை கட்ட பிரித்தானியா முடிவு!
பிரித்தானியாவில் பறக்கும் கார்களுக்கான சிறிய விமான நிலையத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
பிரித்தானியாவின் Urban-Air Port எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனம், தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு வாகன உற்பத்தியாளரான Hyundai நிறுவனத்துடன் இணைந்து, வருங்காலத்தில் உலகம் முழுவதும் மனிதர்களையும் பொருட்களையும் சுமந்து செல்லவுள்ள பறக்கும் கார்களுக்கான சிறிய விமான நிலையங்களை உருவாக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
நகர்புற மையங்களில் ஏர் டாக்ஸிகள் எவ்வாறு செயல்படும் என்பதை நிரூபிக்கும் நோக்கில், ஒரு மொடல் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக இந்த சிறிய விமான நிலையம் இங்கிலாந்தில் உள்ள Coventry நகரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் நடுப்பகுதியில் இதற்கான கட்டமைப்பு பணிகள் தொடங்கப்படுகிறது.
2021 நவம்பர் முதல், கோவென்ட்ரி நகரத்துக்கு வருபவர்கள் ஒரு பறக்கும் கார் விமான நிலையம் எப்படி இருக்கும் என்பதைக் காணலாம் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன் மற்றும் செயல்பாட்டு மின்சார செங்குத்து டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் (eVTOL) வாகனத்தை லேண்டிங் பேடில் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை நிறுவுவதற்கு நிதியளிப்பதற்காக 1.2 மில்லியன் பவுண்டுகள் (1.65 மில்லியன் டாலர்) மானியத்தை Urban-Air Port நிறுவனம் பெற்றுள்ளது.
பூஜ்ஜிய-உமிழ்வு பறக்கும் மற்றும் புதிய விமான வாகனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அரசாங்க திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
