ஒலிம்பிக் போட்டிகளைக் காண பாரீஸ் செல்லும் பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இன்று துவங்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளைக் காண பல்லாயிரக்கணக்கானோர் பாரீஸ் நோக்கி விமானம், ரயில் மற்றும் சொந்த வாகனங்களில் பயணித்துக்கொண்டும் பயணிக்கவும் இருக்கிறார்கள்.
நீங்கள் உங்கள் சொந்த வாகனத்தில் பயணிக்க இருக்கிறீர்கள் என்றால், பிரான்சில் பயணிக்க பல விதிகள் உள்ளன என்பதை நீங்கள் கவனத்தில் கொள்வது நல்லது. இல்லையென்றால், தேவையில்லாமல் அபராதம் செலுத்த நேரிடலாம்!
வித்தியாசமான விதிகள்
இன்றைய காலகட்டத்தில் கூகுள் மேப் உதவியுடன் பயணம் செய்யாதவர்கள் குறைவு எனலாம். ஆனால், பிரான்சில் வேகமாக செல்வதை கண்காணித்து எச்சரிக்கும் ஆப்களை பயன்படுத்தினால் 1,500 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்.
நீங்கள் சாலையில் வாகனத்தில் பயணிக்கும்போது, வழியில் எங்காவது உங்கள் வாகனம் பழுதாகி நின்றுவிட்டால், அதற்காக நீங்கள் 140 யூரோக்கள் செலவு செய்யவேண்டியிருக்கும்.
உங்கள் வாகனத்தில், மாசுக் கட்டுப்பாட்டைக் காட்டும் வகையிலான, முறைப்படியான ஸ்டிக்கர் ஒட்டவில்லையென்றால், உங்களுக்கு 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்.
பிரான்சில் ஹெட்போன் அணிந்தவண்ணம் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம். அதற்கான அபராதம் 135 யூரோக்கள் மற்றும் 3 அபராதப் புள்ளிகள்.
வாகனம் ஓட்டும்போது, உங்களுடன் தேவையான ஆவணங்களை வைத்திராவிட்டால், அதற்கான அபராதம் 750 யூரோக்கள்.
எதிரே வரும் வாகன ஓட்டியின் கண்ணை மறைக்கும் வகையில் ஹெட்லைட் போட்டிருந்தால் அதற்கான அபராதம், 90 யூரோக்கள்.
ஆக, பிரான்சில் வாகனம் ஓட்டும்போது, அங்குள்ள வாகன விதிகளை பின்பற்றாவிட்டால், 2,750 யூரோக்கள் அதாவது 2,316.80 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும் என்பதை பிரித்தானிய வாகன ஓட்டிகள் கவனத்தில் கொள்வது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |