உச்சம் தொட்ட விலை உயர்வு... பிரித்தானியாவில் 24 மில்லியன் குடும்பத்தினருக்கு பேரிடியாகும் புதிய தகவல்
ஏறத்தாழ 24 மில்லியன் குடும்பங்கள் எரிசக்தி விலை உச்சவரம்பினால் பாதிக்கப்படுவார்கள்
எரிசக்தி கட்டணம் செலுத்த முடியாமல் போராடும் மக்களுக்கு இந்த கட்டண உயர்வு பேரிடியாக மாறும்
பிரித்தானியாவில் எதிர்வரும் அக்டோபரில் அமுலுக்கு கொண்டுவரப்படும் எரிசக்தி விலை உயர்வு தொடர்பான புதிய கட்டணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய கட்டணத்தில் இருந்து சுமார் 1,578 பவுண்டுகள் மேலும் அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆண்டு சராசரி கட்டணமானது 3,549 பவுண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தற்போதைய கட்டணத்தில் இருந்து 80% உயர்வு என்றே கூறப்படுகிறது. அடித்தட்டு மக்கள், எரிசக்தி கட்டணம் செலுத்த முடியாமல் போராடும் மக்களுக்கு இந்த கட்டண உயர்வு பேரிடியாக மாறும் என்றே கூறப்படுகிறது.
@getty
நான்கு மில்லியன் முன்பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் உட்பட ஏறத்தாழ 24 மில்லியன் குடும்பங்கள் எரிசக்தி விலை உச்சவரம்பினால் பாதிக்கப்படுவார்கள் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அடித்தட்டு மக்கள், இந்த எரிசக்தி கட்டண உயர்வால் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகலாம் எனவும், பல குடும்பங்கள் ஏழ்மை நிலைக்கு கீழே தள்ளப்படலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், எரிசக்தி கட்டண உயர்வால் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு பொருளாதார உதவிகள் முன்னெடுக்க வேண்டும் என Ofgem பிரித்தானிய பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது ஒற்றைப் படுக்கையறை கொண்ட குடியிருப்புக்கு மாதம் 111 பவுண்டுகள் எரிசக்தி கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் அக்டோபர் முதல் 245 பவுண்டுகளும், ஜனவரி முதல் 302 பவுண்டுகளும் ஏப்ரல் மாதம் முதல் 315 பவுண்டுகளும் செலுத்தும் நிலை ஏற்படும்.
இதேவேளை, 2 முதல் மூன்று பேர் குடியிருக்கும் 3 படுக்கையறை கொண்ட குடியிருப்புக்கு மாதம் 164 பவுண்டுகள் சரிசக்தி கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் அக்டோபர் முதல் 299 பவுண்டுகளும், ஜனவரி முதல் 356 பவுண்டுகளும் ஏப்ரல் மாதம் முதல் 369 பவுண்டுகளும் வசூலிக்கப்படும்.
@bbc
இந்த நிலையில், நிதியமைச்சர் Nadhim Zahawi வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பிரித்தானிய மக்களுக்கும் எரிசக்தி கட்டணத்தில் 400 பவுண்டுகள் சலுகை வழங்க இருப்பதாகவும், மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட உதவித்தொகையான 650 பவுண்டுகள் உடனடியாக அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் 300 பவுண்டுகள் உதவித்தொகை அளிக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிசக்தி கட்டணத்தில் 400 பவுண்டுகள் சலுகை அளிக்கப்பட்டால், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அவர்களின் மாத எரிசக்தி கட்டணத்தில் 66 பவுண்டுகள் வரையில் குறையலாம் எனவும், இது அடுத்த 6 மாதங்களுக்கு தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், 400 பவுண்டுகள் சலுகை என்பது மிகக் குறைவு எனவும் 1,000 பவுண்டுகள் என உயர்த்த வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கு சில சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.