பிரான்சில் புலம்பெயர்வோருக்கு திகிலூட்டும் பிரித்தானிய அமைப்புகள்
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக பிரித்தானிய வலதுசாரி அமைப்பினர் சிலர் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய விடயம் குறித்து கேள்விப்பட்டிருக்கலாம்.
புலம்பெயர்வோரை தடுக்கும் பிரித்தானியர்கள்
பிரித்தானியாவை மையமாகக் கொண்ட, Raise the Colours என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உட்பட பிரித்தானியர்கள் சிலர், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக தாங்களே அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.

அவர்கள் பிரான்சுக்கே சென்று, பிரான்ஸ் கடற்கரைகளில் மணல் குவியல்களுக்குள் மறைத்துவைக்கப்பட்டுள்ள சிறு படகுகளின் எஞ்சின்களை அடித்து நொறுக்கியுள்ளதுடன், கடலுக்குள் இறங்கி சிறுபடகொன்றில் ஏற முயன்ற புலம்பெயர்வோரை அவர்கள் துரத்தும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகின.
அதைத் தொடர்ந்து, புலம்பெயர்வோருக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்ட Raise the Colours அமைப்பைச் சேர்ந்த 10 பேர் பிரான்சுக்குள் நுழையவும், பிரான்சில் தங்கவும் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புலம்பெயர்வோருக்கு திகிலூட்டும் பிரித்தானியர்கள்
இந்நிலையில், பிரித்தானியர்கள் சிலர் தொடர்ந்து புலம்பெயர்வோருக்கு திகிலூட்டும் வகையில் நடந்துகொள்வதாக பிரான்சிலுள்ள புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

சமீபத்தில், பிரான்சிலுள்ள Dunkirk என்னுமிடத்தில் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக காத்திருக்கும் புலம்பெயர்வோர் முகாமிடும் இடங்களுக்கு அருகே, அவர்களை அச்சுறுத்தும் வகையில், தூக்குக்கயிறொன்றை வரைந்து, அதன் அருகில் புலம்பெயர்வோர் என எழுதப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பிரித்தானியர்கள் சிலர் துணிச்சலுடன் வந்து புலம்பெயர்வோருக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த தண்ணீர் போத்தல்களை நாசம் செய்வதும், தண்ணீர் வைத்திருக்கும் கண்டெய்னர்களில் சோப்புக் கரைசலை ஊற்றுவதுமாக அட்டூழியம் செய்வதாக புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
குண்டு துளைக்காத உடை அணிந்த அவர்கள், கடற்கரைக்குச் சென்று, புலம்பெயர்வோரை துன்புறுத்துவதும், அதை நேரலையில் ஒளிபரப்புவதுமாக அச்சத்தை உருவாக்கிக்கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதற்கிடையில், புலம்பெயர்வோரை தடுக்கும் பிரித்தானியர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிரான்ஸ் அரசு எச்சரிக்கை விடுத்தும், பிரித்தானிய வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த சிலருக்கு பிரான்சுக்குள் நுழையவும், பிரான்சில் தங்கவும் தடை விதித்தும், சிறுபடகுகளை முழுமையாக தடுத்து நிறுத்தும் வரை ஓயமாட்டோம் Raise the Colours அமைப்பினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |