அடுத்த 2 நாட்களில் 1500 பிரித்தானியர்களை ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்போம் - பிரித்தானிய பாதுகாப்புத் துறை
ஆப்கானிஸ்தானிலிருந்து அடுத்த 2 நாள்களில் மேலும் 1,500 பேரை வெளியேற்ற அரசு திட்டமிட்டிருப்பதாக பிரித்தானிய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து பிரித்தானிய குடிமக்களை திரும்ப அழைத்து வந்த முதல் விமானம் திங்கள்கிழமை பிரித்தானியா வந்தடைந்தது.
பிரித்தானியா மக்களுக்கு உதவிய ஆப்கன் நாட்டினர் உள்பட ஒருநாளைக்கு சுமார் 1,000 பேர் வரை அரசால் வெளியேற்ற முடியும் என்ற நிலையில், ஆகஸ்ட் 31-க்குள் ஆப்கன் மற்றும் பிரித்தானிய மக்களை வெளியேற்ற வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது.
மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றுவதற்கு உதவ பிரித்தானிய அரசு காபூலுக்கு 600 படைகளை அனுப்பியது.
ஆனால், ஆப்கன் அரசு எதிர்பார்த்ததைவிட வேகமாகக் கவிழ்ந்ததால், அதை ஆகஸ்ட் 31 வரை திட்டமிட்டிருக்கக் கூடாது என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், இராணுவ வீரர்களின் உதவியுடன் ஒருவழியாக நேற்று, பிரித்தானிய குடிமக்கள் மற்றும் காபூல் தூதரக ஊழியர்களுடன் முதல் விமானம், ஆப்கானிஸ்தானில் இருந்து இங்கிலாந்தின் Brize Norton-க்கு வெற்றிகரமாக வந்து தரையிறங்கியது.
தாலிபான்களால் கைப்பற்றப்பட்ட ஆப்கானில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், அடுத்த 2 நாட்களில் ஆப்கானிஸ்தானிலிருந்து மேலும் 1,500 பேரை வெளியேற்ற அரசு திட்டமிட்டிருப்பதாக பிரித்தானிய பாதுகாப்புத் துறை அமைச்சர் பென் வாலஸ் (Ben Wallace) தெரிவித்தார்.