புதிய பிரெக்ஸிட் விதிகள் அமுல்: உணவு பற்றாக்குறையை சந்திக்கவுள்ள பிரித்தானியா!
புதிய பிரெக்ஸிட் விதிமுறைகள் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருவதால் பிரித்தானியாவில் உணவுப் பற்றாக்குறை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (ஜனவரி 1, 2022) முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியாவிற்குள் நுழைவதற்கான உணவுப் பொருட்கள் மீதான பிரெக்ஸிட்டின் சுங்க விதிகள் நடைமுறைக்கு வரும் என்று உணவுத் துறை அமைப்புகள் எச்சரித்துள்ளன. இது நாட்டில் உணவுப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது.
ஜனவரி 1 முதல் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது பிற நாடுகளில் இருந்து ஐக்கிய இராச்சியத்திற்குள் நுழையும் தயாரிப்புகளுக்கான விரிவான சுங்க அறிக்கையை இறக்குமதியாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
பிரித்தானியா, அதன் 90% கீரை மற்றும் 85% தக்காளியுடன், பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான தேவைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதியையே நம்பியுள்ளது.
பிரித்தானிய உறைந்த உணவுக் கூட்டமைப்பு (British Frozen Food Federation) விலங்குகள் மற்றும் தாவரப் பொருட்கள் மீதான புதிய ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகள், புத்தாண்டில் துறைமுகங்களில் கணிசமான தாமதங்களுக்கு வழிவகுக்கும் என்று பரிந்துரைத்தது.
AP-ன் படி, British Frozen Food Federation-ன் தலைமை நிர்வாகி, ரிச்சர்ட் ஹாரோ (Richard Harrow), உணவு விநியோகச் சங்கிலியில் உள்ள அனைவரும் புதிய அளவுகோல்களைப் பின்பற்றுவதை உறுதிசெய்ய போதுமான திட்டமிடல் செய்யப்படவில்லை என்று கவலை தெரிவித்தார்.
இதன் காரணமாக, ஜனவரி மாதம் ஒரு கடினமான மாதமாக இருக்கும் என்று அவர்கள் கவலைப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
AP-ன் படி, உணவுகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், தயாரிப்புகள் பிரித்தானிய எல்லைகளை அடைவதற்கு குறைந்தது நான்கு மணிநேரத்திற்கு முன்னதாக தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விலங்கு மற்றும் தாவர அடிப்படையிலான தயாரிப்புகள் மூலச் சான்றிதழுடன் இருக்க வேண்டும் மற்றும் ஓட்டுநர்கள் தங்கள் பொருட்களை அறிவிக்க வேண்டும் மற்றும் தோற்றத்திற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்.
ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்வதை விட 5 மடங்கு அதிகமான உணவை இறக்குமதி செய்கிறது.
வடக்கு அயர்லாந்து மற்றும் அயர்லாந்து அரசியல் தலைவர்கள் வடக்கு அயர்லாந்து நெறிமுறையை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், அப்பகுதிக்கு மாற்றங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பிரெக்ஸிட் விதிகளால், சிறிய எண்ணிக்கையிலான வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்திருப்பதாக பிரித்தானிய அரசாங்கம் கூறுகிறது.
சுற்றுச்சூழல் மற்றும் கிராமப்புற விவகாரங்கள் துறையின் (Defra) செய்தித் தொடர்பாளர், அவர்கள் இந்த சூழ்நிலைகளை ஆராய்ந்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட நபர்களுடன் குறுகிய கால தீர்வை வழங்குவதற்கும் பணியாற்றி வருவதாகக் கூறினார். இதனால் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.