பிரான்சுடனான புலம்பெயர்தல் ஒப்பந்தம் நாளையுடன் முடிவு: உருவாகியுள்ள அச்சம்
பிரான்சுடனான புலம்பெயர்தல் ஒப்பந்தம் ஒன்று நாளையுடன் முடிவுக்கு வருகிறது.
அதைத் தொடர்ந்து, பிரான்சுடன் புலம்பெயர்தல் தொடர்பில் புதிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள பிரித்தானியா திட்டமிட்டிருந்த நிலையில், அந்த திட்டமும் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த கால இடைவெளியை பயன்படுத்திக்கொண்டு, ஆட்கடத்தல்காரர்கள் தீவிரமாக செயல்பட்டு அதிக அளவில் புலம்பெயர்வோரை பிரான்சிலிருந்து கடத்தக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
பிரான்சுடனான புலம்பெயர்தல் ஒப்பந்தம்
2023ஆம் ஆண்டு, மார்ச் மாதம், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்தும் வகையில், பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று செய்துகொள்ளப்பட்டது.

பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்துவதற்காக, பிரெஞ்சு பொலிசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்காகவும், பொலிசார் ரோந்துப் பணிகள் மேற்கொள்வதற்ககாவும், தடுப்புக் காவல் மையம் ஒன்றை உருவாக்குவதற்காகவும், பிரான்சுக்கு 500 மில்லியன் பவுண்டுகள் தர பிரித்தானியா ஒப்புக்கொண்டது.
அதைத் தொடர்ந்து, பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரில் 50 சதவிகிதம் பேரை பிரெஞ்சு தரப்பு தடுத்து நிறுத்தியது.
ஆனால், போகப்போக, பிரெஞ்சு தரப்பு அலட்சியம் காட்டத் துவங்கிவிட்டது. தடுத்து நிறுத்தப்படும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை, 50 சதவிகிதத்தில் இருந்து குறைந்து சுமார் 37 சதவிகிதமாகிவிட்டது.
புதிய புலம்பெயர்தல் ஒப்பந்தம்
ஆகவே, பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய புலம்பெயர்தல் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள பிரித்தானியா தயாரானது.

புதிய ஒப்பந்தத்தின்படி, பிரான்ஸ் எத்தனை புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்துகிறதோ, அதற்கேற்ப பிரித்தானியா பிரான்சுக்கு நிதி வழங்கும் என்பது திட்டம்.
அதற்கு பிரான்ஸ் தரப்பில் சரியான வரவேற்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுவதால் அந்த ஒப்பந்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உருவாகியுள்ள அச்சம்
ஆக, தற்போதைய ஒப்பந்தம் நாளை முடிவுக்கு வருகிறது, புதிய ஒப்பந்தம் கையெழுத்தாவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒப்பந்தங்கள் எதுவும் அமுலில் இல்லாத இந்த கால இடைவெளியை பயன்படுத்திக்கொண்டு, இடைப்பட்ட காலகட்டத்தில், ஆட்கடத்தல்காரர்கள் தீவிரமாக செயல்பட்டு அதிக அளவில் புலம்பெயர்வோரை பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு சிறுபடகுகள் மூலம் எந்த தடையுமின்றி கடத்தக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |