மொராக்கோ கடலில் மாயமான பிரித்தானிய சிறுமி: பிரிட்டிஷ் அரசுக்கு பெற்றோர் உருக்கமான வேண்டுகோள்
மொராக்கோ நாட்டு கடலில் 7 வயது பிரித்தானிய சிறுமி காணாமல் போன நிலையில், பிரித்தானிய அரசு விரைந்து தலையீட்டு இதில் உதவ வேண்டும் சிறுமியின் பெற்றோர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட சிறுமி
பிரித்தானியாவின் லங்காஷயரின் பிளாக்பர்ன் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி இனாயா மக்டா, புதன்கிழமை மொராக்கோவின் காசாபிளான்கா கடற்கரையில் பாறை மீது அமர்ந்திருந்த போது பிரமாண்ட அலை அடித்து கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

மொராக்கோவிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய குடும்பத்தை சேர்ந்த 7 வயது சிறுமி இனாயா மக்டா(Inaayah Makda) கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதை அடுத்து, அப்பகுதி சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் அட்னான் ஹூசைன் தலைமையில் சிறுமியை பத்திரமாக மீட்கும் தேடுதல் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குழந்தையை இழந்த பிரித்தானிய பெற்றோர், தங்கள் மகள் இனாயா மக்தாவை மீட்க பிரித்தானிய அரசு கூடுதல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் தங்கள் வாழ்க்கையின் மிகவும் கடினமான மற்றும் தாங்க முடியாத வேதனையிலும் அலைச்சலிலும் இருப்பதாக பெற்றோர் தங்கள் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
பிரித்தானிய அரசிடம் கோரிக்கை
பிரித்தானிய அரசு இந்த விவகாரத்தில் தலையீட்டு, தேடுதல் பரப்பளவை விரிவுபடுத்த மொராக்கோ அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இனாயா பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் மொராக்கோ அதிகாரிகளுக்கு தேடுதலுக்கு தேவையான நவீன மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த உபகரணங்களை தேடுதல் பணிக்காக வழங்க வேண்டும்.
சாதாரணமான தேடுதல் என்பதோடு நின்று விடாமல் சாத்தியமான அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி இனாயா தேடும் பணி தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே சமயம் பிரித்தானிய அரசின் வெளியுறவுத்துறை(FCDO) சிறுமி இனாயா தேடுதல் நடவடிக்கையை தீவிரமாக கவனித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்திற்கு உரிய ஆறுதல் வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த உறுதிமொழிகள் தங்களுக்கு எந்த தீர்வையும் தரவில்லை என்றும் தேடுதல் பணி துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் இனாயா மக்தா குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |