கொரோனா பூஸ்டர் தடுப்பூசி வழங்குவது குறித்து பிரித்தானிய அரசு முக்கிய அறிவிப்பு!
பிரித்தானிய மக்கள் தங்களுக்கான 2-வது கொரோனா தடுப்பூசியை பெறுவது குறித்து தடுப்பூசி அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
70 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதிய மாறுபாடுகளிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள கோவிட் பூஸ்டர் தடுப்பூசிகளை வரும் செப்டெம்பர் மாதம் முதல் பெற ஆரம்பிக்கலாம் என்று தடுப்பூசி அமைச்சர் Nadhim Zahawi தெரிவித்துள்ளார்.
முதலில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசிகளை வழங்க முன்னுரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானிகள் பூஸ்டர் தடுப்பூசிகள் குறித்து தீவிரமான ஆய்வில் ஈடுபட்டு வருவதாக கூறிய Zahawi, பிரித்தானியாவில் விரைவில் 8 கொரோனா தடுப்பு மருந்துகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
அவை, கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உலகின் மூன்று வெல்வேறு கொரோனா வைரஸ் வகைகளுக்கு எதிராகவும் மிகுந்த பாதுகாப்பை அளிக்கக்கூடியதாக இருக்கும் என கூறியுள்ளார்.
பிரித்தானியா தற்போது ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஃபைசர்-பயோஎன்டெக் உருவாக்கிய இரண்டு தடுப்பூசிகளைப் பயன்படுத்துகிறது.
மேலும், மூன்றாவதாக மாடர்னா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இதுவரை 29 மில்லியனுக்கு அதிகமானவர்கள் தங்கள் முதல் டோஸ் கொரோனா தடுப்புசியை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

