திங்கட்கிழமைக்குள்... தயவு செய்து இது செய்துவிடுங்கள்: பிரித்தானியா மக்களுக்கு அரசாங்கம் வலியுறுத்தல்
பிரித்தானியாவில் நோய் தொற்றால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள் தடுப்பூசி போட முன்வர வேண்டும் என பிரித்தானியா அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்கள், முன்னணி சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு தொழிலாளர்கள் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் உள்ள முதியவர்கள் என முன்னுரிமை குழுவில் உள்ள அனைவருக்கும் திங்கட்கிழமைக்குள் தடுப்பூசி போடும் முனைப்பில் இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
முதல் முன்னுரிமை குழுவில் உள்ள மக்களுக்கு தடுப்பூசிளை வழங்குவதற்கான இலக்கை பிரித்தானியா அரசாங்கம் நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை இதுவரை 14 மில்லியனுக்கும் அதிகமான முன்னுரிமை குழுவில் உள்ள பிரித்தானியர்கள் பெற்றுள்ளனர், அதாவது சுமார் 90 சதவீதம் பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.
ஆனால் இன்னும் முதல் டோஸை போட்டுக்கொள்ளாதவர்களுக்கும் தடுப்பூசி போட முடியும் என அதிகாரிகள் நம்புகிறார்கள்.
தடுப்பூசி போட ஊக்குவிக்க தடுப்பூசி மையங்களில், விளையாட்டு அரங்கம் முதல் கதீட்ரல்கள் வரை கிட்டத்தட்ட 30 அரசாங்க அமைச்சர்கள் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
70 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இன்னும் தடுப்பூசி போடாத அனைவரும் இந்த வார இறுதியில் முன்வந்து, NHS-ஐ தொடர்புகொண்டு அவர்களுக்கான தடுப்பூசியை பெறுவது மிகவும் முக்கியமானது என்று சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் கூறினார்.
ட்விட்டரில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், தடுப்பூசிகளைப் பெற முன்வராத முன்னுரிமை குழுவில் உள்ள சில நபர்கள், விரைவில் ஊசியை போட்டுக்கொள்ளுமாறு பிரித்தானியா பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.