ஒரு குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு விசா திடீர் நிறுத்தம்: பிரித்தானியா முடிவு
உக்ரைன் நாட்டவர்களுக்கு குடும்ப விசா வழங்குவதை பிரித்தானிய அரசு திடீரென நிறுத்தியுள்ளது.
உக்ரைன் குடும்ப விசா திடீர் நிறுத்தம்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் உறவினர்களைக் கொண்ட உக்ரைனியர்களுக்கு குடும்ப விசா வழங்கத் துவங்கியது பிரித்தானியா.
அதாவது, உக்ரைன் நாட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாராவது பிரித்தானியாவில் வாழ்ந்தால், அவர்கள் பிரித்தானியாவிலிருக்கும் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்துகொள்ளும் நோக்கில் இந்த விசா வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், நேற்றுடன் இந்த திட்டம் முடிவுக்கு வந்துள்ளது. உக்ரைனியர்களுக்கான குடும்ப விசா திட்டம், நேற்று, அதாவது, 2024, பிப்ரவரி மாதம் 19ஆம் திகதி, மதியம் 3.00 மணியுடன் முடிவுக்கு வந்துவிட்டதாக பிரித்தானிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு
இப்படி முன்னறிவிப்பின்றி உக்ரைன் குடும்ப விசா திட்டம் திடீரென முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதற்கு, எதிர்க்கட்சியினரும், புலம்பெயர்தல் ஆதரவு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால், உக்ரைனியர்களுக்கான குடும்ப விசா திட்டம்தான் முடிவுக்கு வந்துள்ளது, பிரித்தானியாவில் வாழும் உக்ரைனியர்கள் யாரையும் யாரும் இப்போது பிரித்தானியாவை விட்டு வெளியேறுங்கள் என்று கூறவில்லை. அவர்களுக்கான, உக்ரைனியர்களுக்காக வீடுகள் என்னும் திட்டம் இன்னமும் நடைமுறையில்தான் உள்ளது என பிரித்தானிய உள்துறைச் செயலரான ஜேம்ஸ் கிளெவர்லிக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த உக்ரைனியர்களுக்காக வீடுகள் திட்டம் என்பது என்னவென்றால், உக்ரைனிலிருந்து போருக்குத் தப்பி வருபவர்களை, பிரித்தானியர்கள் ஸ்பான்சர் செய்து, அவர்களைத் தங்கள் வீடுகளில் தங்கவைக்கும் திட்டம் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |