பிரித்தானியாவில் சர்வதேச பயணிகளுக்கான கோவிட் சோதனை விலையில் தில்லு முள்ளு! தனியார் நிறுவனங்களுக்கு அரசு எச்சரிக்கை!
அதிக கட்டணம் வசூலிக்கும் சர்வதேச பயணிகளுக்கான கோவிட் சோதனை நிறுவனங்களுக்கு பிரித்தானிய சுகாதாரத் துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியாவிற்குள் நுழையும் அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் 2 முறை கோவிட் பரிசோதனை கட்டாயம். நாட்டிற்குள் நுழைந்த இரண்டாவது மற்றும் எட்டாவது நாட்களில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சோதனை நிறுவனங்களால் சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில், பிரித்தானிய சுகாதார செயலாளர் சஜித் ஜாவித், இந்த சோதனை நிறுவனங்களால் வழங்கப்படும் விலை மற்றும் சேவை தரங்களை திங்கட்கிழமை துரிதமாக ஆய்வு செய்தார்.
அப்போது, பல நிறுவனங்கள் அரசு நிர்ணயித்த சோதனை கட்டணத்தை விட 18 சதவிகிதம் வரை குறைத்து வழங்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 82 தனியார் கோவிட் -19 பயண சோதனை நிறுவனங்களுக்கு இரண்டு வேலைநிறுத்த எச்சரிக்கையை சஜித் ஜாவித் வழங்கியுள்ளார். அவர்கள் முரண்பாடுகளை சரிசெய்ய தவறினால், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என எச்சரித்துள்ளார். மேலும், 57 நிறுவனங்கள் GOV.UK பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிவித்தார்.
இந்த நடவடிக்கை குறித்து அவர் கூறுகையில் "எந்தவொரு தனியார் சோதனை நிறுவனமும் விடுமுறைக்கு வருபவர்களைப் பயன்படுத்திக் கொள்வது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் கூறினார்.
மேலும், சோதனைகளுக்கான உண்மையான செலவை பிரதிபலிக்கும் வகையில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தளம் (GOV.UK) புதுப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.